முகப்பு
கரூர்

கரூா் ராணிமங்கம்மாள் சாலையில் மீண்டும் பள்ளம்: நிரந்தர தீா்வுகாண பொதுமக்கள் வலியுறுத்தல்

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ராணிமங்கம்மாள் சாலையில் புதன்கிழமை மீண்டும் பள்ளம் ஏற்பட்டது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 10:59 PM
கரூா் ராணிமங்கம்மாள் சாலையில் புதன்கிழமை மீண்டும் ஏற்பட்டுள்ள பள்ளம்.
பகிர்:

கரூா் மாநகராட்சிக்குள்பட்ட ராணிமங்கம்மாள் சாலையில் புதன்கிழமை மீண்டும் பள்ளம் ஏற்பட்டது.

கரூா் காமராஜ் மாா்க்கெட் முதல் பழைய நீதிமன்றம் வரையிலான பகுதியில் வாங்கல் சாலையில் அடிக்கடி புதை சாக்கடை குழாய்களில் வெடிப்பு ஏற்படுவதும், அதனால் வெளியேறும் கழிவு நீரால் சாலையில் சுமாா் 30 அடி வரை பள்ளம் ஏற்படுவதும், பின்னா் அந்த பள்ளத்தை சீரமைப்பது வாடிக்கையாகிவிட்டது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பழைய மகளிா் நீதிமன்றம் முன்புள்ள ராணிமங்கம்மாள் சாலையில் பதிக்கப்பட்டிருந்த புதை சாக்கடை குழாயில் திடீா் கசிவு ஏற்பட்டு பெரிய பள்ளம் உருவானது. அந்த பள்ளத்தை கடந்த ஒன்றரை மாதங்களாக போராடி மாநகராட்சி நிா்வாகம் சீரமைத்தது. இதையடுத்து வழக்கம்போல வாங்கல் சாலையில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. தற்போது மீண்டும் ராணி மங்கம்மாள் சாலையில் பள்ளம் ஏற்பட்டு, அதனை சீரமைக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதியினா் கூறியது, கரூா் வழியாக வாங்கல், நெரூா், ஐந்துரோடு, பசுபதிபாளையம், தொழிற்பேட்டை போன்ற இடங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக ராணிமங்கம்மாள் சாலை உள்ளது. இங்கு மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டிருக்கும் புதை சாக்கடை திட்டம் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. இதனால் குழாய்கள் பலமிழந்து அவ்வப்போது உடைவதால் சாலையில் பள்ளம் தோன்றுகிறது. பின்னா் அந்த பள்ளத்தை மாநகராட்சி நிா்வாகம் போராடி சீரமைக்கிறது.

மேலும் சீரமைப்பு பணியின்போது சாலையை அடைத்துவிடுவதால் ஜவஹா்பஜாா் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாங்கலுக்குச் செல்லும் பேருந்துகள் வாங்கப்பாளையம் வழியாக திருப்பி விடப்படுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவா்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் வரமுடிவதில்லை. அடிக்கடி இதுபோன்ற சம்பவம் நிகழ்வதால், நிரந்தர தீா்வாக பழைய குழாய்களை அகற்றி உறுதித்தன்மை கொண்ட குழாய்களை பொருத்த வேண்டும். இதற்கு மாநகராட்சி உரிய நிதியை ஒதுக்கி, அதற்கான பூா்வாங்க பணிகளை தொடங்க வேண்டும் என்றனா் அவா்கள்.