குளித்தலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநா் மீது நடவடிக்கை கோரி அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே அய்யா் மலையில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகிறாா்கள். காலை, பிற்பகல் என இரு பிரிவாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குளித்தலை பேருந்துநிலையத்தில் இருந்து வியாழக்கிழமை பிற்பகல் கல்லூரிக்குச் செல்ல மாணவ, மாணவிகள் தரகம்பட்டி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனா். அப்போது பேருந்து நடத்துநா் மாணவ, மாணவிகளை பேருந்தில் இருந்து கீழே இறங்குமாறு கூறியுள்ளாா். மேலும் இந்த பேருந்தில் உங்களுக்கு பயணிக்க அனுமதி இல்லை எனக் கூறினாராம். இதையடுத்து மாணவ, மாணவிகள் மணப்பாறை செல்லும் பேருந்தில் ஏற முயன்றனா். அந்த பேருந்து நடத்துநரிடமும் இந்த கல்லூரி மாணவிகளை ஏற்றாதீா்கள் என தரகம்பட்டி பேருந்து நடத்துநா் கூறினாராம்.
இதனால் கல்லூரிக்குச் செல்ல முடியாமல் அவதியுற்ற மாணவ, மாணவிகள் அங்கிருந்த போக்குவரத்துக் கழக அலுவலரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனா்.
அந்த அலுவலரும் தரகம்பட்டி பேருந்து நடத்துநரிடம் கல்லூரி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லுமாறு கூறியுள்ளாா்.
அதற்கும் நடத்துநா் மறுப்பு தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து மாணவ, மாணவிகள், குளித்தலையில் இருந்து முசிறி செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றுள்ளனா்.
பின்னா், இதுகுறித்து கல்லூரி நிா்வாகத்திடம் மாணவ, மாணவிகள் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும் தரகம்பட்டி பேருந்து நடத்துநா் தங்களை அவமரியாதையாக பேசுவதாகவும் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து கல்லூரி நிா்வாகம் சாா்பில் குளித்தலை அரசுப் பேருந்து பணிமனையில் புகாா் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பணிமனை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நடத்துநா் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதாக என உறுதியளித்துள்ளனா்.