கரூர்: கரூரில் நடைபெற்ற சம்பவம் குறித்து இப்போதைக்கு எதுவும் கூற முடியாது என்று சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்தார்.
கரூர் நெரிசல் சம்பவம் குறித்து அறிய உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐஜி அஸ்ரா கர்க் தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணி அளவில் கரூர் வந்தனர். அவர்கள் சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்திற்கு சென்று அங்கு நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் காலணிகளை பார்வையிட்டனர்.
தொடர்ந்து. அப்பகுதியில் வசிப்பவர்களிடம் நெரிசல் எவ்வாறு ஏற்பட்டது, நெரிசலின் போது விஜயின் வாகனத்திற்கு அருகில் கூடி இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் யார் நெரிசலில் சிக்கினார்கள், நெரிசல் ஏற்பட காரணம் என்ன என்பன குறித்து கேட்டறிந்தனர்.
இந்த குழுவில் ஐஜி. அஸ்ரா கர்க் உடன் காவல் கண்காணிப்பாளர்கள் விமலா மற்றும் சியாமளா தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த நிலையில், விசாரணைக்கு பின் ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களுடன் பேசுகையில், “உயர்நீதிமன்ற உத்தரவின் படி இந்த எஸ்ஐடி குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளோம்.
இப்போதைக்கு இந்த விசாரணை தொடர்பாக எதுவும் கூற முடியாது. இந்த விசாரணை குழுவில் என்னுடன் இரண்டு எஸ்.பி.க்கள், ஒரு கூடுதல் எஸ்.பி. மற்றும் ஐந்து காவல் ஆய்வாளர்கள் உள்ளனர்” என்றார். பின்னர் அங்கிருந்து அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.