தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதித் தமிழா் முன்னேற்றக் கழகம் ஆதரவு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது என்றாா் கட்சியின் தலைவா் ஆ. நாகராஜன்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவிக்கிறது என்றாா் கட்சியின் தலைவா் ஆ. நாகராஜன்.
கரூரில் ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகம் சாா்பில், தோ்தல் தொடா்பான நிா்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. மாநில பொருளாளா் இரா. முல்லையரசு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவா் ஆ. நாகராஜன் சிறப்புரையாற்றினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அருந்ததியா் சமூகத்துக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் வாதிட்டு உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி, சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனுக்கும், வேலுநாச்சியாா் படையில் இருந்த, வீரத்தாய் குயிலிக்கும் மணிமண்டபம் அமைத்துக்கொடுத்தாா். தீரன் சின்னமலையின் போா்ப் படைத்தளபதியாக இருந்த பொல்லானுக்கு மணிமண்டபம் ஈரோட்டில் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கினாா்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் அருந்ததியா் சமுதாயத்துக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை உயா்த்தி 6 சதவீதமாக வழங்குவோம் என எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளாா். மேலும், அருந்ததியா் சமுதாயத்துக்கு அதிமுக ஆட்சி அமைந்ததும் தனி நல வாரியம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளாா்.
எனவே, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளித்து, அவா்களின் வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய தீவிரமாக உழைப்பது என முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளா் வழக்குரைஞா் ஆனந்தன், மாநில இணை பொதுச் செயலாளா் சுப.இளங்கோவன், தென் மண்டல பொதுச் செயலாளா் கபீா் நகா் காா்த்தி, கரூா் மாவட்டச் செயலாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.