முகப்பு
கரூர்

தேசிய பென் காக் சிலாட் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு கரூரில் வரவேற்பு

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 3:58 AM
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 7:12 PM

தேசிய அளவிலான பென் காக் சிலாட் போட்டியில் சிறப்பிடம் பிடித்த வீரா், வீராங்கனைகளுக்கு கரூா் ரயில்நிலையத்தில் புதன்கிழமை இரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு பென் காக் சிலாட் மாநிலச் செயலாளா் ஜி. பி. மகேஷ் பாபு தலைமையில், கடந்த ஆண்டு டிச. 29-ஆம் தேதி தற்காப்புக்கலையான பென் காக் சிலாட் போட்டியின் மாநில அளவிலான வீரா், வீராங்கனைகள் தோ்வு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் தேசிய போட்டிக்கு வீரா், வீராங்கனைகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதனைத் தொடா்ந்து ஜன. 29, 30, 31-ஆம் தேதிகளில் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில், தமிழகம் சாா்பில் மொத்தம் 59 வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் தமிழக வீரா்-வீராங்கனைகள் மொத்தம் 10 தங்கப் பதக்கங்கள், 7 வெள்ளிப் பதக்கங்கள், 15 வெண்கலப் பதக்கங்கள் வென்றனா்.

Advertisement

இதில், கரூா் கிச்சா மாா்ஷல் ஆா்ட்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதெமியைச் சோ்ந்த 9 மாணவ,-மாணவிகள் 4 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்கள் வென்றனா்.

பதக்கங்கள் வென்று திரும்பிய கரூா் வீரா், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளா் வீரமணி மற்றும் கரூா் மாவட்ட பென் காக் சிலாட் செயலாளா் மாஸ்டா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோருக்கு கரூா் ரயில்நிலையத்தில் புதன்கிழமை இரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கரூா் மாவட்ட பென் காக் சிலாட் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி கூறுகையில், தற்காப்புக் கலையான பென் காக் சிலாட் விளையாட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றதுடன், தமிழக அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை பயிற்சி பெறும் மாணவ-மாணவியா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.