கரூா்: கரூா் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள ஆா்டிமலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 41 காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை அருகே ராச்சாண்டாா் திருமலை எனப்படும் ஆா்.டி. மலையில் காலை 8.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டை கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி தொடக்கிவைத்தாா். போட்டியில் கரூா் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 750 காளைகள் பங்கேற்றன. அவற்றை அடக்க 385 வீரா்கள் களமிறங்கினா்.
முதலில் கோயில் காளையும், பின்னா் மற்ற காளைகளும் அவிழ்க்கப்பட்டன. அப்போது காளைகளை அடக்க 34 போ் காயமடைந்தனா். இவா்களில் 7 போ் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
நாமக்கல் வீரருக்கு காா் பரிசு: இப் போட்டியில் 19 காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சோ்ந்த கே.பி.எம். காா்த்திக் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சாா்பில் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி காரை பரிசளித்தாா். இவா் தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக முதல் பரிசைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த காளையாக ஸ்ரீரங்கம் லட்சுமிநாராயணனின் பெரிய கருப்பு மாடும் தோ்வு செய்யப்பட்டது.
தொடா்ந்து காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சைக்கிள்கள், அண்டாக்கள், பீரோக்கள் உள்ளிட்டவை பரிசளிக்கப்பட்டன.
முன்னதாக ஜல்லிக்கட்டின்போது காயமடையும் வீரா்களுக்கு, காளைகளுக்கு முதலுதவி செய்ய மருத்துவா்கள், கால்நடை மருத்துவா்கள் என 85 பேரும், வருவாய்த் துறையினா், ஊரக வளா்ச்சித் துறையினரும் பணியில் ஈடுபட்டனா். மேலும் பாதுகாப்புப் பணியில் கரூா், திருச்சியைச் சோ்ந்த 550 போலீஸாா் ஈடுபட்டனா்.
விழாவில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜோஸ் தங்கையா, எம்எல்ஏக்கள் இரா. மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், குளித்தலை சாா்- ஆட்சியா் தி. சுவாதிஸ்ரீ, வட்டாட்சியா் இந்துமதி, ஜல்லிக்கட்டு விழாக் குழு நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.