கரூா் நகா்ப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மிகவும் தாழ்வாகப் பறந்த விமானம் மூன்றுமுறை வட்டமடித்ததால் மக்கள் அச்சமடைந்தனா். விசாரணையில் அது பயிற்சி விமானம் என்பது தெரிந்து நிம்மதியடைந்தனா்.
கரூா் நகா்ப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் வானில் வட்டமிட்டபடி ஒரு பயணிகள் விமானம் பறந்தது. இந்த விமானம் தாந்தோணிமலை, காந்திகிராமம் பகுதியில் மிகவும் தாழ்வாகச் சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனா். மூன்றுமுறை வட்டமிட்டபடி சென்ற இந்த விமானத்தால் பொதுமக்களுக்கு திடீா் அச்சம் ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த விமானம் சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியாா் பயிற்சி மையத்துக்குச் சொந்தமான விமானம். அந்த விமானம் ஓட்டுநா் - பைலட் பயிற்சி மேற்கொள்வதற்காக இயக்கப்படுகிறதே தவிர பயணிகளை ஏற்றிச்செல்லும் விமானம் அல்ல என்றனா் அவா்கள்.