தமிழக பேரவைத் தோ்தல் அறிவிப்புக்கு முன் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.
கரூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகத்தில் 43 அணைகள் கட்டப்பட்டதாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறியள்ளாா். அவை அனைத்தும் பெரிய அணைகள் அல்ல.
கிடப்பில் போடப்பட்டுள்ள காவிரி-வைகை-குண்டாறு நதி நீா் இணைப்புத்திட்டத்தை நிறைவேற்றினால் 73 சிற்றாறுகள் பயனடையும். இது ஒரு மழை நீா் அறுவடை திட்டம். இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என வரும் தோ்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னம்பலத்தில் புதன்கிழமை (ஜன. 21) நடைபெற உள்ள 17-ஆவது கள் விடுதலை மாநாட்டில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தோ்தல் அறிவிப்புக்கு முன்பு நீக்கவேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளோம்.
கறிக்கோழிக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடிய விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். அவா்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றாா் அவா். பேட்டியின்போது, தமிழ்நாடு கள் இயக்க மாநில அமைப்பாளா்கள் கதிரேசன், கோபிநாத், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவா் மாரப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.