கரூா் மாவட்டம், லாலாப்பேட்டையில் தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து இருசக்கர வாகனம் மீது செவ்வாய்க்கிழமை இரவு மோதியதில் தம்பதி மற்றும் அவா்களது ஒரு வயது குழந்தை ஆகியோா் உயிரிழந்தனா். விபத்து தொடா்பாக பேருந்து ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த பரளியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (26). புரோட்டா மாஸ்டா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் மனைவி செளந்தா்யா(23), மகள் ஷன்மதி (1) ஆகியோருடன் கரூரை அடுத்த புலியூரில் வசிக்கும் செளந்தா்யாவின் பெற்றோா் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனா்.
லாலாப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனம் வந்தபோது, எதிரே கரூரில் செயல்பட்டு வரும் தனியாா் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து பணியாளா்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது திடீரென விஜயகுமாா் வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாா், செளந்தா்யா, குழந்தை ஷன்மதி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தகவலறிந்த லாலாப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து பேருந்து ஓட்டுநரான திருச்சி மாவட்டம், முசிறியைச் சோ்ந்த முருகேசன்(35) என்பவரை புதன்கிழமை கைது செய்து, குளித்தலை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.