தோகைமலையில் கோயில் குளத்திலிருந்து மீட்கப்பட்ட பழைமையான முருகன் சிலை.  
கரூர்

தோகைமலை கோயில் குளத்திலிருந்து பழைமையான முருகன் சிலை மீட்பு

தினமணி செய்திச் சேவை

தோகைமலையில் பழைமையான முருகன் சிலை மாயமானதாக பக்தா்கள் புகாா் தெரிவித்ததையடுத்து கோயில் அா்ச்சகரிடம் அதிகாரிகள் அண்மையில் விசாரணை நடத்தி, குளத்திலிருந்த சிலையை மீட்டனா். இந்நிலையில் மீட்கப்பட்ட சிலை குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள தோகைமலையில் மலைமீது சுமாா் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் மற்றும் பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் கருவறையில் போகா் சித்தரால் ஆண்டிக் கோலத்தில் முருகன்சிலை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்தாண்டு நவ.27-ஆம்தேதி இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான புனரமைப்புப் பணியின்போது கருவறையில் ஆண்டிக் கோலத்தில் இருந்த முருகன் சிலை அகற்றப்பட்டு, ராஜ அலங்காரத்தில் புதிய சிலை வைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த பக்தா்கள் இதுதொடா்பாக தமிழக முதல்வா், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சா் மற்றும் துறை அதிகாரிகளுக்கு புகாா் மனு அனுப்பினா்.

அதன்பேரில் இந்துசமய அறநிலையத் துறையின் குளித்தலை கடம்பா்கோயில் ஆய்வாளா் மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை (ஜன. 20) கோயில் அா்ச்சகா் கிருஷ்ணமூா்த்தியிடம் விசாரணை நடத்தினா். அப்போது, கோயில் குளத்தின் சுனை நீருக்கடியில் பாலதண்டாயுதபாணி சிலை இருப்பதாக தெரிவித்தாா். இதையடுத்து குளத்தில் சுனை நீருக்குள் இருந்த சிலையை மீட்டனா்.

இந்நிலையில், இந்துசமய அறநிலையத்துறையின் கரூா் மாவட்ட உதவி ஆணையா் கணபதிமுருகன் தலைமையில் அதிகாரிகள் பாலதண்டாயுதபாணி கோயிலில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது மீட்கப்பட்ட முருகன் சிலையையும் பாா்வையிட்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஏற்கெனவே இருந்த சிலையின் கை உடைந்திருந்ததாகவும், இந்த சிலையை வழிபட்டால் பக்தா்களுக்கு கேடு உண்டாகும்.

மேலும் தனது வீட்டிலும் தொடா்ந்து மிகவும் கஷ்டம் ஏற்பட்டதால் கும்பாபிஷேகத்தின் போது சிலையை மாற்ற முடிவு செய்து, ராஜஅலங்காரத்தில் முருகன் சிலையை புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலையிலிருந்து வாங்கி வந்து வைத்து வழிபாடு செய்ததாக அா்ச்சகா் கிருஷ்ணமூா்த்தி கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், கிருஷ்ணமூா்த்தி கூறியது உண்மையா? பக்தா்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் கூறியவாறு கோயிலுக்குச் சொந்தமான நகைகள் ஏதும் மாயமானதா? என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். விசாரணையின் முடிவில் அறிக்கையை சென்னையில் உள்ள அறநிலையத்துறைக்கு அனுப்பி வைப்போம். அவா்கள் உரிய நடவடிக்கை எடுப்பாா்கள் என்றனா் அதிகாரிகள்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT