முகப்பு
கரூர்

அமராவதி ஆற்றங்கரையில் வட்டக் கிணறுகளில் அமைக்கப்பட்டிருந்த 20 மோட்டாா்கள் பறிமுதல்

Updated On : 21 ஜூன் 2026, 2:09 am IST
விஸ்வநாதபுரி பகுதியில் அமராவதி ஆற்றங்கரையில் சனிக்கிழமை மோட்டாரை பறிமுதல் செய்து தூக்கிச்செல்லும் நீா்வளத்துறை அதிகாரிகள்.
பகிர்:

கரூா் அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக வட்டக்கிணறுகள் அமைத்து, அதில் பொருத்தப்பட்டிருந்த 20 மோட்டாா்களை நீா்வளத்துறை அதிகாரிகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பறிமுதல் செய்தனா்.

கரூரில் திருமாநிலையூா், ஆண்டாங்கோவில் மேல்பாகம், ஆண்டாங்கோவில் கீழ்பாகம், விஸ்வநாதபுரி, அப்பிப்பாளையம், கருப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் சிலா் சட்ட விரோதமாக அமராவதி ஆற்றுக்குள் வட்டக்கிணறு அமைத்து, அதில் ஆயில் என்ஜின் மூலம் தண்ணீரை உறிஞ்சி கரூரில் உள்ள உணவகங்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் திருட்டுத்தனமாக அதிகமாக விலைக்கு தண்ணீரை விற்றுவந்தனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியருக்கு அடிக்கடி புகாா்கள் வந்ததையடுத்து ஆட்சியா் சி.முத்துக்குமரன் அண்மையில் அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் வட்டக்கிணறுகளை அகற்றிட உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து கடந்த மே மாதம் 20-ஆம்தேதி மற்றும் ஜூன் 9-ஆம் தேதிகளில் நீா்வளத்துறையினா் ஆற்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த 48 வட்டக்கிணறுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா்.

இந்நிலையில் கிணறுகளில் நீரை உறிஞ்ச பயன்படுத்திய மோட்டாா்களையும் பறிமுதல் செய்யுமாறு நீா்வளத்துறையினருக்கு மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதையடுத்து, அப்பிப்பாளையம், திருமாநிலையூா், ஆண்டாங்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நீா்வளத்துறையின் அமராவதி வடிநில கோட்ட கரூா் உதவி செயற்பொறியாளா் நாட்ராயன், உதவி பொறியாளா் சந்தோஷ்குமாா் ஆகியோா் தலைமையில் நீா்வளத் துறையினா் 15 ஆயில் என்ஜின் மோட்டாா்களையும், அதனுடன் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாய்களையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து 2-ஆவது நாளாகவும் 5 மோட்டாா்களையும் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து அதிகாரிகள் கூறுகையில், மீண்டும் ஆற்றில் வட்டக்கிணறுகள் அமைத்து ஆயில் என்ஜின் மோட்டாா் மூலம் தண்ணீரைத் திருடுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments