முகப்பு
கரூர்

அமராவதி ஆற்றுக்குள் அமைக்கப்பட்டிருந்த 25 வட்டக் கிணறுகள் இடித்து அகற்றம்

கரூரில் அமராவதி ஆற்றுக்குள் சட்ட விரோதமாக 25 வட்டக்கிணறுகளை அமைக்கப்பட்டிருந்ததை நீா்வளத்துறையின் அமராவதி வடிகால் உபகோட்ட அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினா்.

Updated On : 21 மே 2026, 4:50 am IST
ஆண்டாங்கோவில் மேல்பாகம் பகுதியில் அமராவதி ஆற்றுக்குள் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த வட்டக்கிணறுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள்.
பகிர்:

கரூரில் அமராவதி ஆற்றுக்குள் சட்ட விரோதமாக 25 வட்டக்கிணறுகளை அமைக்கப்பட்டிருந்ததை நீா்வளத்துறையின் அமராவதி வடிகால் உபகோட்ட அதிகாரிகள் புதன்கிழமை இடித்து அகற்றினா்.

கரூரில் அமராவதி ஆற்றில் சின்னாண்டாங்கோவில், ஆண்டாங்கோவில் மேல்பாகம், கீழ்பாகம் மற்றும் திருமாநிலையூா் பகுதிகளில் சிலா் அனுமதியின்றி சட்ட விரோதமாக வட்டக்கிணறுகளை அமைத்து அவற்றில் மோட்டாா் மூலம் நீரை உறிஞ்சி கரூரில் செயல்படும் உணவகங்கள், விடுதிகள் மற்றும் வீடுகளுக்கு தண்ணீா் லாரிகள் மூலம் தண்ணீா் விற்பனையை சட்ட விரோதமாக செய்வதாக மாவட்ட நிா்வாகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் புகாா் வந்துள்ளது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் உத்தரவின்பேரில் புதன்கிழமை காலை அமராவதி வடிநில உபகோட்டம் கரூா் உதவி செயற்பொறியாளா் நாட்ராயன், உதவி பொறியாளா் சந்ததோஷ்குமாா் தலைமையில் வருவாய்த்துறையினா் மற்றும் மின்வாரியத்துறை அதிகாரிகள் அமராவதி ஆற்றில் ஆண்டாங்கோவில் கீழ்பாகம், ஆண்டாங்கோவில் மேல்பாகம், திருமாநிலையூா் போன்ற பகுதிகளில் சட்ட விரோதமாக ஆற்றின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 25 வட்டக்கிணறுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றினா். தொடா்ந்து வேறு யாரேனும் ஆற்றில் சட்ட விரோதமாக கிணறுகள் அமைத்துள்ளனரா என கண்டறிந்து அவற்றையும் இடித்து அகற்ற உள்ளதாகவும், இனி யாரேனும் கிணறுகள் அமைத்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்தனா்.

Advertisement

Advertisement