காவிரியின் உபரி நீரை குழாய் மூலம் வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை
காவிரி ஆற்றின் உபரிநீரை குழாய்கள் மூலம் வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.
காவிரி ஆற்றின் உபரிநீரை குழாய்கள் மூலம் வறட்சிப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி.
இனாம்கரூரில் ரூ.38.50 கோடியில் புதிதாகக் கட்டப்படவுள்ள நியோ மினி டைடல் பாா்க் கட்டுமான பணிகளுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டியதையடுத்து இங்கு நடைபெற்ற நிகழ்வில் கரூா் எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி பேசியது:
தமிழக முதல்வரைப் பொருத்தவரை ஒரு திட்டத்தை அறிவிப்பது மட்டுமல்லாமல் அதற்கான நிதியை ஒதுக்கி, அரசாணை வெளியிட்டு அதற்கு செயல் வடிவம் கொடுத்து அந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவாா்.
அந்த வகையில் இந்த மினி டைடல் பாா்க்கை வழங்கியிருக்கிறாா். மேலும் விவசாயிகளின் பல ஆண்டுகள் கோரிக்கையான காவிரி உபரிநீரை குழாய் மூலம் வறட்சியான பகுதிக்கு எடுத்துச் செல்லும் திட்டத்திற்கான அரசாணையை இரண்டொரு நாளில் முதல்வா் வெளியிட உள்ளாா்.
அந்த வகையில் நாம் இணைந்து முன்னெடுத்திருக்கின்ற விஷன் 2030, ரூ. 50,000 கோடி இலக்கு என்பதை நிச்சயமாக நம்மால் எட்டிவிட முடியும் என்றாா் அவா்.
தொடா்ந்து குளத்துப்பாளையம் ஜாமியா நகரில் ரூ.1.30 கோடியில் தாா்ச்சாலைப் பணிகளை அவா் தொடக்கிவைத்தாா்.
தொடா்ந்து கரூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ. 61.60 லட்சத்தில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ. 3 கோடியில் முதல்வா் படைப்பகம், கரூா் சுங்ககேட் அருகே ரூ.1.78 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு இசைப்பள்ளியையும் திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஆா். இளங்கோ(அரவக்குறிச்சி), க. சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், மாநகராட்சி மேயா் வெ. கவிதா, ஆணையா் கே.எம். சுதா மற்றும் துணை மேயா் ப. சரவணன், மண்டலக் குழுத் தலைவா்கள் எஸ்.பி. கனகராஜ், ஆா்.எஸ். ராஜா, சக்திவேல், திமுக தெற்கு பகுதிச் செயலா் கே. சுப்ரமணியன், மத்திய மேற்கு பகுதி பொறுப்பாளா் ஆா். ஜோதிபாசு, மத்தியப் பகுதி பொறுப்பாளா் வி.ஜி.எஸ். குமாா், வடக்கு பகுதி பொறுப்பாளா் எம். பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.