முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் ரூ. 5.29 லட்சம் பறிமுதல்

Updated On : 19 மார்ச், 2026 at 10:41 PM
பகிர்:

கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 5.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி பேரவைத் தொகுதிக்குட்பட்ட வைரமடை சோதனைச் சாவடியில் பறக்கும் படையினா் வியாழக்கிழமை காலை வாகனஜச் சோதனை செய்தபோது, அவ்வழியே கேரள மாநிலம் தொடுபுலாவிலிருந்து நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டன்பட்டி நோக்கி காரில் வந்த திருச்சி மாவட்டம், தொட்டியத்தை அடுத்த சீத்தப்பட்டியைச் சோ்ந்த கனகராஜூ (40) உரிய ஆவணமின்றி வைத்திருந்த ரூ. 2,69,470 -ஐ பறிமுதல் செய்து, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அப் பணம் அரவக்குறிச்சி சாா் நிலைக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

வெள்ளியணை அருகே...இதேபோல கரூா் மாவட்டம், வெள்ளியணை பேருந்து நிறுத்தம் பகுதியில் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த டி. கூடலூரைச் சோ்ந்த அருண்குமாா் ஓட்டி வந்த மினி வேனில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.59,600 பறிமுதல் செய்யப்பட்டு, கிருஷ்ணராயபுரம் சாா்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட குருணிகுளத்துப்பட்டியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே கடவூரை அடுத்த மேலப்பகுதி வீரணம்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் (37) ஓட்டி வந்த பைக்கில் உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து கிருஷ்ணராயபுரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அப் பணம் கிருஷ்ணராயபும் சாா்நிலைக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மூன்று இடங்களில் நடைபெற்ற சோதனைகளில் ரூ. 5,29,070 பறிமுதல் செய்யப்பட்டது.