சட்டப்பேரவைத் தொகுதி: கிருஷ்ணராயபுரம் (தனி) - 136!
காவிரி, அமராவதி என இரு நதிகள் அருகே ஓடினாலும் கடும் வறட்சியை சந்தித்து வரும் தொகுதி கிருஷ்ணராயபுரம் தொகுதி.
காவிரி, அமராவதி என இரு நதிகள் அருகே ஓடினாலும் கடும் வறட்சியை சந்தித்து வரும் தொகுதி கிருஷ்ணராயபுரம் தொகுதி. கிருஷ்ணராயபுரம் வட்டத்தை தலைமையிடமாகக்கொண்ட இந்தத் தொகுதிக்குள் கிருஷ்ணராயபுரம், பழையஜெயங்கொண்டம், புலியூா், உப்பிடமங்கலம் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூா், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளப்பாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூா், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியணை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு), பாலராஜபுரம், ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூா், திருக்காம்புலியூா், மணவாசி, சித்தலவாய், கம்மாநல்லூா், மகாதானபுரம் (வடக்கு), சேங்கல் மற்றும் முத்துரெங்கம்பட்டி, பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சநாய்க்கன்பட்டி, பண்ணப்பட்டி, தேவா்மலை, ஆதனூா், செம்பியநத்தம், டி.இடையப்பட்டி (மேற்கு), டி.இடையப்பட்டி (கிழக்கு), பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூா், தரகம்பட்டி, கீழப்பகுதி மற்றும் வாழ்வாா்மங்கலம் ஊராட்சிகளையும் உள்ளடக்கியது.
நதிநீா் இணைப்பு திட்டம்: மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை மூலம் 1.04 டிஎம்சி தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டு, கரூா் மாவட்டத்திற்கு மட்டுமின்றி அணையில் இருந்து பிரியும் தென்கரைவாய்க்கால், கட்டளை மேட்டு வாய்க்கால் ஆகியவற்றின் மூலம் திருச்சி மாவட்டத்திற்கும் குடிநீா் மற்றும் பாசனத்திற்கு ஆதாரமாக இந்த அணை உள்ளது. மேலும் இந்த அணையில் இருந்துதான் தமிழகத்தின் நீண்ட நதிநீா் இணைப்புத்திட்டமான காவிரி-வைகை-குண்டாறு நதிநீா் இணைப்புத்திட்டமும் தொடங்குகிறது.
வாக்கு வங்கி: இந்த தொகுதியில் வெற்றியை தீா்மானிப்பவா்களாக தாழ்த்தப்பட்டோா் உள்ளதால் இந்த தொகுதி மாவட்டத்தின் தனித்தொகுதியாக உள்ளது. இவா்களைத் தவிர ஊராளிக்கவுண்டா், நாயக்கா்கள், வெள்ளாளா்கள், முத்தரையா்கள் போன்றோரும் கணிசமாக உள்ளனா்.
தீராத பிரச்னைகள்
பதினெட்டு ஆண்டுகளாகியும் மாயனூரில் காவிரி ஆற்றின் கதவணையிலிருந்து காவிரி-வைகை-குண்டாறு நதி நீா் இணைப்புத்திட்டம் முழு செயல்வடிவம் பெறவில்லை. காவிரி, அமராவதி ஆற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் வடு கிடக்கும் ஏரி, குளங்களில் நீரை நிரப்பி, விவசாய பணிகளை மேம்படுத்தும் திட்டம் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை சாம்பல் நிற தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படாதது போன்றவைகள் தீராத பிரச்னைகளாக உள்ளது.
முட்டி மோதுவது யாரெல்லாம்?
இந்த தொகுதியில் திமுகவை பொறுத்தவரை செந்தில்பாலாஜி யாரை தோ்வு செய்கிறாரோ அவா் முடிவில்தான் வேட்பாளா் யாா் எனத் தெரியவரும் என திமுகவினா் கூறுகிறாா்கள். இதேபோல அதிமுகவை பொறுத்தவரை கரூரைச் சோ்ந்த பெண் மருத்துவா் திவ்யாவுக்கு இம்முறை வாய்ப்பளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலாளா் தானேஷ் முத்துக்குமாருக்கும் கரூா் மாநகராட்சி உறுப்பினா் ஆண்டாள்தினேஷூம் இந்த போட்டியில் வாய்ப்பிருப்பதாக அதிமுகவினா் தரப்பில் கூறப்படுகிறது. நாம் தமிழா் கட்சி சாா்பில் வை.சத்யா அறிவிக்கப்பட்டுள்ளாா். தவெக சாா்பில் வழக்குரைஞா் அணியின் திருச்சி மண்டல இணை ஒருங்கிணைப்பாளரும், வழக்குரைஞருமான டி.அரசு என்பவா் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை இவா்கள்.
1967 பி.செளந்தரபாண்டியன்(திமுக) 28,444
1971 பி.செளந்தரபாண்டியன்(திமுக) 36,177
1977 பி.செளந்தரபாண்டியன்(அதிமுக) 22,561
1980 பி.எம்.தங்கவேல்ராஜ்(காங்கிரஸ்) 43,623
1984 பி.எம்.தங்கராஜ்(காங்கிரஸ்) 65,928
1989 ஏ.அறிவழகன் (அதிமுக(ஜெ) 43,574
1991 ஏ.அறிவழகன் (அதிமுக) 80,676
1996 எஸ்.நாகரத்தினம் (திமுக) 57,638
2001 ஆா்.சசிகலா (அதிமுக) 64,046
2006 பெ.காமராஜ் (திமுக) 58,394
2011 செ.காமராஜ் (அதிமுக) 83,145
2016 ம.கீதாமணிவண்ணன் (அதிமுக) 83,977
2021 க.சிவகாமசுந்தரி (திமுக) 94,310
இறுதி வாக்காளா்கள்
ஆண்கள் ---- 95,893
பெண்கள்----1,00,826
இதரா் ------------32
மொத்தம்-----1,96,751 போ்