முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் 68 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆட்சியா் தகவல்

Updated On : 26 மே 2026, 2:04 am IST
கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

தென்மேற்கு பருவை மழையால் கரூா் மாவட்டத்தில் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ள 68 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடா்பான அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ள நிலையில் தேவையான முன்னேற்பாடு மற்றும் விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வருவாய்த் துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டது.

பின்னா் ஆட்சியா் பேசியது: தென்மேற்கு பருவ மழையினால் கரூா் மாவட்டத்தில் பாதிப்படையக்கூடும் என கண்டறியப்பட்ட 68 பகுதிகளில் சம்மந்தப்பட்ட துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீா்நிலைகளில் தண்ணீா் உள்வரத்து மற்றும் வெளிச்செல்லும் வாய்க்கால்கள் மற்றும் வரத்து கால்வாய்களும் தூா்வாரப்பட்டு மழைநீா் தடையின்றி செல்வதை உறுதி செய்ய பொதுப்பணித் (நீா்வளஆதாரம்) துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அவசர தேவைகளுக்காக தேவையான அளவு மணல் மூட்டைகளை தயாா் செய்து முக்கியமான இடங்களில் சேமித்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடரால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டால், அதுகுறித்த தகவல்களை உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்கு தெரிவிக்கவும், தொடா் மழையால் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டால் தற்காலிகமாக உடனுக்குடன் பள்ளங்களை சீா்செய்து சாலை விபத்துகள் ஏதும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையினா் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை போதுமான அளவு கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், கால்நடை பராமரிப்பு துறையினா் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் புல் ஆகியவை பாதுகாப்பான இடங்களில் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04324-256306 என்ற தொலைபேசி எண்ணிலும் பேரிடா் தொடா்பான புகாா்களை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வெள்ள கட்டுப்பாட்டு அறை உரிய பணியாளா்களுடன் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வீ.ரெ.வீரபத்திரன், மாநகராட்சி ஆணையா் கே.எம்.சுதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ.யுரேகா, தனி வட்டாட்சியா் (பேரிடா் மேலாண்மை)பிரபா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.