பெரம்பலூரில் அம்மா உணவகம் சூறை
பெரம்பலூரில் அம்மா உணவகம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
பெரம்பலூரில் அம்மா உணவகம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. இங்கு, வழக்கம்போல் சமையல் செய்வதற்காக மகளிர் சுய உதவிக்குழுவினர் சிலர் வியாழக்கிழமை அதிகாலையில் வந்தபோது, பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த அரிசி, காய்கறிகள், மளிகை பொருள்கள் மற்றும் பாத்திரங்கள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
மேலும், உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த விலைப்பட்டியல், திறப்பு விழா ஆகியவற்றின் பேனர்களில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமும் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் அங்கு சென்று சேதப்படுத்தப்பட்ட பொருள்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.