பெரம்பலூர்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியர் ஆய்வு

DIN

பெரம்பலூர் மாவட்டம், வி.களத்தூர், பசும்பலூர், கை.களத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
ஆய்வில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம், மருத்துவர்கள் தினசரி சிகிச்சை அளிக்கிறார்களா, தட்டுப்பாடின்றி மருந்துகள் தொடர்ந்து வழங்கப்படுகிறதா என கேட்டறிந்த ஆட்சியர், பொதுமக்களுக்குத் தேவையான மருந்துகள் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்ட ஆட்சியர், நோயாளிகளின் நலன் கருதி பல்வேறு சோதனைகளின் முடிவுகளை உடனுக்குடன் தெரிவித்து, அவர்களுக்குத் தேவையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து, சித்தா பிரிவுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், கருவுற்ற தாய்மார்களுக்கு அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் கிடைக்கிறதா எனக் கேட்டறிந்தார். மேலும், இலவசமாக வழங்கப்படும் அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டக மருந்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சித்த மருத்துவப் பிரிவில் உள்ள அலுவலர்கள் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மருந்துகள் குறித்து விளக்கி, அவர்கள் தொடர்ந்து மருந்துகள் உட்கொள்கிறார்களா எனக் கேட்டறிய வேண்டுமென உத்தரவிட்டார்.
பின்னர், நோயாளிகளின் விவரங்களின் பதிவேடு, நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்யும் கருவிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ஆட்சியர் சாந்தா. ஆய்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் (பொ) சேதுராமன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சம்பத், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் அரவிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT