உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிப்பு
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலர் வீரவணக்க
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காவல் துறையில் பணியில் இருந்தபோது உயிரிழந்த காவலர்கள் நினைவாக வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நாளாக அக். 21 ஆம் தேதி
நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. திபெத் எல்லையில் கடந்த 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற சண்டையின் போது எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 20 காவலர்கள் வீரமரணமடைந்தனர். இந்தச் சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அக். 21 ஆம் தேதி பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் கடந்த ஆண்டு பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிகப்பாளர் திஷா மித்தல், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, உயிர்நீத்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில், கூடுதல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் பலர் பங்கேற்றனர்.
அரியலூர்: காவல் துறை உள்ளிட்ட காவல் படைகளில் பணியாற்றி வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்.21ஆம் தேதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆளிநர்களைக் கொண்டு 60 குண்டுகள் முழங்க அங்குள்ள நீத்தார் நினைவு தூணுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து ஆயுதப்படை ஆய்வாளர் குமரன், காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் மேகலா மற்றும் காவல் ஆய்வாளர்கள், தீயணைப்பு படைவீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.