சிறப்பான வாழ்க்கைக்கு "கணவன், மனைவி உறவு சீராக இருக்க வேண்டும்'
சிறப்பான வாழ்க்கைக்கு கணவன், மனைவி உறவு சீராக இருக்க வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி.
சிறப்பான வாழ்க்கைக்கு கணவன், மனைவி உறவு சீராக இருக்க வேண்டும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி.
பெரம்பலூர் பாலக்கரையில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் அறிவுத் திருக்கோயிலில் மனைவி நல வேட்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
பெண்ணின் துணையில்லாமல் யாரும் இல்லை. ஆணின் வாழ்க்கையில், பெண் வாழ்க்கைத் துணையாக வந்த பிறகே அவ்வாழ்க்கை இறைநிலை நோக்கிய பயணத்தில் அர்த்தமுள்ளதாகிறது.
குடும்ப வாழ்க்கையில், இன்ப துன்பங்களில் பங்குகொண்டு வாழ்வைச் சீரமைத்து வாழ்வதற்கு, கணவன்- மனைவி உறவு சீராக இருக்க வேண்டும். அந்த இரு ஆன்மாவும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். கருத்து வேறுபாடு, பிணக்கு இல்லாமல் என்றும் மாறாத நட்போடு வாழ்வது அவசியமாகும். எந்தவொரு மனிதனும் பெண்மையின் துணை இல்லாமல் வாழ்வதில்லை.
அதற்காகவே தம்பதியர் ஒருவரை ஒருவர் தினந்தோறும் வாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக வாழ்க வளமுடன் என்னும் அற்புத மந்திரத்தை ஆசான் வழங்கியுள்ளார். அவ்வாறு வாழ்த்தி, அதன் இனிமையை உணர்ந்து மனைவியை மதித்து போற்றிடும் விதத்தில் கொண்டாடும் விழாவே மனைவி நல வேட்பு விழா என்றார் அழகிரிசாமி.
பின்னர், மனவளக்கலை பேராசிரியர் இல. தியாகராஜன் அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து, மனவளக்கலை பேராசிரியர் ராதாலட்சுமி - தியாகராஜன் தம்பதியர், மனைவி நல வேட்பு விழா செய்முறை நடத்தினர். விழாவுக்கு வந்திருந்த தம்பதியர் காந்தப் பரிமாற்றத் தவம், அருள்காப்பு செய்து கொண்டனர்.
பெரம்பலூர் மனவளக்கலை பேராசிரியர் சு. ஹேமலதா, பேராசிரியர் புவனேஸ்வரி, 100க்கும் மேற்பட்ட தம்பதியர்கள் பங்கேற்றனர். முன்னதாக, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் செள.சந்திரசேகரன் வரவேற்றார். பொருளாளர் கு.கருப்பையா நன்றி கூறினார்.