பெரம்பலூர்

குடிநீர் வசதியின்றி பேருந்து நிலையங்கள்: பயணிகள் அவதி

DIN

பெரம்பலூரில் உள்ள பழைய மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் குடிநீர் வசதி இல்லாததால் இங்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெரம்பலூரில் வாட்டி வதைக்கும் கோடை வெயிலால் வாகன ஓட்டிகள் மற்றும் நகர மக்கள் வெளியே நடமாட முடியாமல், கடும் அவதிப்படுகின்றனர்.
கத்திரி வெயில் ஆரம்பிக்க சில நாள்களே உள்ள நிலையில், பெரம்பலூரில் நாள்தோறும் வெயில் 103 டிகிரி அளவை எட்டி வருகிறது. கடந்தாண்டு கத்திரி வெயில் அதிகப்படியாக 108 டிகிரியை எட்டியது. தற்போது, அதற்கு இணையாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
இதனால் அத்தியாவசியப் பொருள்களை வாங்க சந்தைக்கு வரும் பொதுமக்கள் சிறிது தொலைவு நடந்து செல்வதற்குள் வியர்வையில் நனையும் நிலை உள்ளது. அதேபோல, வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 
வெயில் காரணமாக நீர்ச் சத்துக் குறைபாடு ஏற்படுவதால், பொதுமக்கள் குளிர்பானம் மற்றும் பழக் கடைகளை நாடிச் செல்கின்றனர். இதனால் குளிர்பான விற்பனை சூடுபிடித்துள்ளது. 
இந்நிலையில் பேருந்து நிலையங்களுக்கு வந்துசெல்லும் பயணிகளுக்கு நகராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தராததால் பயணிகள் அவதியடைகின்றனர்.  நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் புறநகர் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மேலும், அங்கு பெயரளவுக்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளையும் கடந்த பல மாதங்களாக காணவில்லை.  
இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள் குடிநீர் வசதியின்றி அவதிப்படுகின்றனர். மேலும், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, அளவு, விலை உள்ளிட்ட எந்தத் தகவலும் இன்றி கடைகளில் விற்கப்படும் தரமற்ற தண்ணீரை அருந்தும் அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதேபோல, பழைய பேருந்து நிலையத்திலும் குடிநீர் வசதி இல்லை.  
இதனால், இங்கு குழந்தைகளுடன் வரும் பயணிகள் குடிநீருக்காக வணிக நிறுவனங்களைத் தேடிச்செல்லும் நிலை நீடிக்கிறது. பெரும்பாலான கடைகளில் வறட்சியைக் காரணம் காட்டி தண்ணீர் தர மறுக்கின்றனர். ஒரு சில கடைகளில் வழங்கப்படும் தண்ணீரும் சுகாதாரமற்றதாக உள்ளது. எனவே, கோடை காலத்தை கருத்தில் கொண்டு பேருந்து நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT