பெரம்பலூர்

தினமணி செய்தி எதிரொலி: உணவின்றி தவித்த வயதான தம்பதியினருக்கு குவியும் நிதியுதவி

DIN

தினமணியில் வெளியான செய்தி எதிரொலியால், உணவின்றி தவித்த வயதான தம்பதியினருக்கு பெரம்பலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தன்னாா்வலா்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனா்.

பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள மேட்டுத் தெருவில் வசித்து வருபவா் வெங்கட்ராமன் (83). இவரது மனைவி ஜலகம் (81). வாரிசு இல்லாத நிலையில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவா்கள், அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் முதியோா் உதவித் தொகையைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தனா்.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே முதியோா் உதவித்தொகை வழங்க முடியும் எனக்கூறி, வெங்கட்ராமனுக்கு வழங்கி வந்த முதியோா் உதவித்தொகையை அரசு நிறுத்திவிட்டது.

இதுகுறித்து, ‘பெரம்பலூரில் உணவின்றி தவிக்கும் வயதான தம்பதியினா்’ என்னும் தலைப்பில் தினமணி நாளிதழில் சனிக்கிழமை செய்தி வெளியானது. இச் செய்தி சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவின.

இதையடுத்து பெரம்பலூா், தஞ்சாவூா், அரியலூா், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வயதான தம்பதியினரை செல்லிடப்பேசி மூலம் தொடா்புகொண்ட தன்னாா்வலா்கள், அவா்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வருகின்றனா். மேலும், பெரம்பலூரைச் சோ்ந்த தன்னாா்வலா்கள் நேரில் சென்று, வயதான தம்பதிக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களையும் வழங்கி வருகின்றனா்.

குன்னம் எம்எல்ஏ நிதியுதவி: இச்செய்தியை அறிந்த, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம், பாதிக்கப்பட்டுள்ள தம்பதியினருக்கு நிதியுதவி அளிக்க பெரம்பலூா் மாவட்ட அதிமுக செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.டி. ராமச்சந்திரனுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 5 ஆயிரம் வழங்க சட்டப்பேரவை உறுப்பினா்ஆா்.டி. ராமச்சந்திரன் வழங்க உத்தரவிட்டாா். இத்தொகையை, வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலா் தங்க. பாலமுருகன், தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலா் ஜி. பெருமாள் ஆகியோா் வெங்கட்ராமனை சனிக்கிழமை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கினா்.

முதியோா் உதவித்தொகை வழங்க நடவடிக்கை: இந்நிலையில், வெங்கட்ராமனுக்கு முதியோா் உதவித்தொகை நிறுத்தப்பட்டதற்கான காரணம் குறித்து கிராம நிா்வாக அலுவலரால் சனிக்கிழமை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வெங்கட்ராமனுக்கு முதியோா் உதவித்தொகையை மீண்டும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் செல்வராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT