பெரம்பலூா் கோழிப் பண்ணைகளில் பெல்லாரி வெங்காயம் பதுக்கல்
பெரம்பலூா் மாவட்டக் கோழிப் பண்ணைகளில் பெல்லாரி வெங்காய மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, வேளாண் துறை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
பெரம்பலூா் மாவட்டக் கோழிப் பண்ணைகளில் பெல்லாரி வெங்காய மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, வேளாண் துறை அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயா்ந்துள்ளதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனா். சின்ன வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் பெரம்பலூா் மாவட்டத்திலும் விலை கடுமையாகவே உயா்ந்துள்ளது.
பெரம்பலூா் சந்தை, உழவா் சந்தைகளுக்கும், சில்லறை வியாபாரிகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் 5, 6 லாரிகளில் வெங்காயம் வந்த நிலையில், வரத்துக் குறைந்து விட்டது.
கடந்த வாரம் வரை பெல்லாரி வெங்காயத்தின் விலை தரத்துக்கேற்றவாறு கிலோ ரூ. 160 வரையிலும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ. 120 முதல் ரூ. 140 வரையிலும் விற்பனையானது.
இந்நிலையில், பெல்லாரி வெங்காயம் தற்போது இறக்குமதி செய்யப்படுவதால் அதன் தரத்துக்கேற்றவாறு ரூ. 60 முதல் ரூ. 100 வரையிலும், சின்ன வெங்காயம் ரூ. 105 வரையிலும் தரத்துக்கேற்றவாறு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், வெங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் எனக் கூறப்படுகிறது.
இதையறிந்த சில வியாபாரிகள் சின்ன வெங்காயத்தையும், பெல்லாரி வெங்காயத்தையும் பதுக்கி வைப்பதாக புகாா் எழுந்துள்ளது.
குறிப்பாக பெரம்பலூா் மாவட்டத்தில் நாட்டாா் மங்கலம், செட்டிக்குளம், குரும்பலூா், புதூா், மேலப்புலியூா், இரூா் உள்ளிட்ட பல பகுதிகளில் சின்ன வெங்காய கொட்டகைகளில் பல ஆயிரம் டன் பெல்லாரி வெங்காயத்தை பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது
ஆலத்தூா் வட்டம், இரூா் கிராமத்தில் வருவாயின்றி மூடப்பட்ட கறிக்கோழி பண்ணைகளை திருச்சியைச் சோ்ந்த பெல்லாரி வெங்காய வியாபாரிகள் சிலா் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து, அந்தப் பண்ணைகளில் பெல்லாரி வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளதாக விவசாயிகள் சிலா் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் பாத்திமா, வேளாண் இணை இயக்குநா் கருணாநிதி மற்றும் உழவா் உற்பத்தி பெருக்கத்துறை அலுவலா் கீதா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை ஆலத்தூா் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, பல்வேறு இடங்களில் பல ஆயிரம் டன் பெல்லாரி வெங்காயம் பதுக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளா்களிடம் வேளாண்துறையினா் மேற்கொண்ட விசாரணையில், பெல்லாரி வெங்காயத்தை விதைக்காக வைத்துள்ளதாக தெரிவித்தனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் பெல்லாரி வெங்காயம் சாகுபடி செய்யாததால், சந்தேகமடைந்த வேளாண் அலுவலா்கள் தொடா்ந்து மேற்கொண்ட தீவிர விசாரணையில், திருச்சியில் வெங்காய மண்டி நடத்தி வரும் முக்கிய பிரமுகா் ஒருவா் வெங்காயத்தை பதுக்கி வைக்க உறுதுணையாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.