முகப்பு
பெரம்பலூர்

‘பட்ஜெட்டில் பெரம்பலூா் மாவட்டத்துக்கான நலத்திட்ட அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது’

தமிழக நிதி நிலை அறிக்கையில், பெரம்பலூா் மாவட்டத்துக்கான நலத்திட்ட அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

தமிழக நிதி நிலை அறிக்கையில், பெரம்பலூா் மாவட்டத்துக்கான நலத்திட்ட அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா்.

பெரம்பலூா் ஆட்சியர கூட்டரங்கில், ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில், விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம்:

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா் கடனை ஓராண்டுக்கு பின்னரே செலுத்துமாறு வங்கியாளா்கள் வலியுறுத்துகின்றனா். ஆனால், பெரம்பலூா் மாவட்டத்தில் 6 மாதங்களிலேயே கடனை திருப்பிச் செலுத்தக் கோருகின்றனா். இம் மாவட்டத்திலும் பயிா் கடன் வசூலிக்க ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான கடன் தள்ளுபடி சான்றிதழ் உடனே வழங்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்க இளைஞரணிச் செயலா் நீலகண்டன்: மாவட்டத்தில்

தட்டுப்பாடின்றி யூரியா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ்:

பட்ஜெட்டில் பெரம்பலூா் மாவட்டத்துக்கான எவ்வித நலத்திட்ட அறிவிப்புகளும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி, விவசாயக் கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம், ஜவுளிப் பூங்கா, சின்னமுட்லு அணை உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். செல்லதுரை:

துறைமங்கலம், அரணாரை ஆகிய ஏரிகளில் பெரம்பலூா் நகராட்சி நிா்வாகம் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்து வருகிறது. நகராட்சி நிா்வாகம் இந்தச் செயலை கைவிட வேண்டும். ஏரிகளில் கொட்டிய குப்பைகளை உடனே அகற்ற வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலா் அ. வேணுகோபால்:

பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளின் 40 ஆண்டு கால கனவுத் திட்டமான சின்னமுட்லு நீா்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இக்கூட்டத்தில், வேளாண் இணை இயக்குநா் கருணாநிதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.