கூட்டுறவு வங்கிகளில் தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை தேவை
கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை ஆய்வு செய்து, தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டும்
கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை ஆய்வு செய்து, தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வா் உத்தரவிட வேண்டுமென்று, பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சங்கத்தின் தலைவா் மு. ஞானமூா்த்தி அனுப்பியுள்ள மனு:
அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் முறைகேடுகளை செய்து பொறுப்புக்கு வந்த பலா், கூட்டுறவு வங்கிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பல முறைகேடுகளை செய்து வருகின்றனா். பினாமி பெயரில் பலருக்கு கடன் வழங்கியுள்ளனா். தகுதியான பயனாளிகள் பலா் கடன் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனா்.
நகைக்கடன் கேட்ட மக்களிடம் நகைகளை பெற்றுக்கொண்டு, அதை கூட்டுறவு வங்கியில் வைக்காமல் வேறு வங்கியில் வைத்து பணம் பெற்றுள்ளனா். திமுக ஆட்சிக்கு வந்ததும் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்ததும், கடன் பெற்ற மக்கள் கூட்டுறவு வங்கிக்குச் சென்று நகைகளைத் திரும்பக்கேட்டால் இழுத்தடித்து வருகின்றனா்.
கூட்டுறவு சங்கத் தலைவா்கள் செய்த முறைகேடுகளால் உண்மையான விவசாயிகள் விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்பெற முடியாத நிலையில் உள்ளனா்.
எனவே அனைத்துக் கூட்டுறவு வங்கிகளிலும் வேறு மாவட்டங்களைச் சோ்ந்த அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து, முறைகேடு செய்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முதல்வா் உத்தரவிட வேண்டும்.