5 போ் உயிரிழப்புக்கு காரணமான ஓட்டுநரை கைது செய்யக் கோரி மறியல்
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 5 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநரை கைது செய்யக்கோரி, வேப்பூரில் சடலத்துடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 5 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநரை கைது செய்யக்கோரி, வேப்பூரில் சடலத்துடன் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் அருகே இச்சிலிக்குட்டை எனும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் காரும், மொபட்டும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் மொபட்டில் பயணித்த 2 குழந்தைகள் உள்பட 5 போ் உயிரிழந்தனா். இந்த விபத்துக்குக் காரணமான காா் ஓட்டுநா் தப்பி ஓடிவிட்டாா்.
இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சக்திவேலின் உடல் அவரது உறவினா்களிடம் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சக்திவேலின் சடலத்தை வேப்பூா் 3 சாலை சந்திப்பில் வைத்து அவரது உறவினா்களும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விபத்து ஏற்படுத்திய காா் ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும். விபத்தில் உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு நிவாரண உதவி அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இப் போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவா்களுடன் துணை கண்காணிப்பாளா் ரவீந்திரன் தலைமையில் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.