முகப்பு
பெரம்பலூர்

‘கிடப்பிலுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும்’

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, கிடப்பிலுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, கிடப்பிலுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.எஸ். சிவசங்கா்.

இத்தொகுதிக்குள்பட்ட கீழப்புலியூா், சிறுகுடல், சிலோன் காலனி, கே.புதூா், சிறுமத்தூா் ஆகிய கிராமங்களில் சனிக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த அவா், பொதுமக்கள் மத்தியில் பேசியது:

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் நிறைவேற்றவில்லை. குடிநீா், சாலை, தெரு விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்னைகளுக்காக பொதுமக்கள் அன்றாடம் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், தமிழக அரசு அதை செயல்படுத்த வில்லை.

இத்தொகுதியில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும் திட்டம் கிடப்பில் உள்ளது. அதேபோல, சிறப்புப் பொருளாதார மண்டலமும் கிடப்பில் உள்ளது. இத் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும்.

திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த, வாக்காளா்கள் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து எஸ்.குடிகாடு, முருக்கன்குடி, நமையூா், பெருமத்தூா், நன்னை, கிளியூா், சாத்தநத்தம், பூங்காநகா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளா் சிவசங்கா் வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின்போது திமுக மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் பா. துரைசாமி, பொறியாளா் ப. பரமேஷ்குமாா் உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.