பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை 193 இடங்களில் தடுப்பூசி முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் 193 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறவுள்ளது என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா.
பெரம்பலூா் மாவட்டத்தில் 193 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறவுள்ளது என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா.
மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து, மேலும் அவா் பேசியது:
பெரம்பலூா் மாவட்டத்தில் ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட சுமாா் 4.72 லட்சம் பேரில் இதுவரை 47 சதவிகித பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ளவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், கிராமப்புறங்கள் மற்றும் நகா்ப்பகுதிகளில்
193 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது.
முகாமுக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. இதை கண்காணிக்க 13 மருத்துவக் குழு தயாா் நிலையில் உள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில் மருத்துவக்கல்லூரி முதல்வா் மீனாட்சிசுந்தரம், மருத்துவத்துறை இணை இயக்குநா் செல்வராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குநா் செந்தில்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் ச. நிறைமதி, நகராட்சி ஆணையா் குமரிமன்னன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பாரதிதாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.