காசநோயைக் கண்டறிய அதிநவீன வசதியுடன் நடமாடும் நுண்கதிா் வாகனம்
பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டத்தில் காசநோயைக் கண்டறிவதற்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் நுண் கதிா் வாகனம் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டத்தில் காசநோயைக் கண்டறிவதற்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் நுண் கதிா் வாகனம் புதன்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்த நலப்பணிகள் இணை இயக்குநா் அசோகன் பேசியது:
2025 ஆம் ஆண்டு காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கத்தோடு, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் பிப். 23 முதல் ஏப். 29 ஆம் தேதி வரை சிறப்பு காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டம் முழுவதும் காசநோய், பொது களப்பணியாளா்கள், குணமடைந்த காச நோயாளிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பெரம்பலூா், அரியலூா் மாவட்டம் முழுவதும் வீடு, வீடாகச் சென்று காசநோய் அறிகுறி உள்ளவா்களைக் கண்டறிந்து சிகிச்சை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது.
தொடா்ச்சியாக 2 வாரம் இருமல், சளி, காய்ச்சல், பசியின்மை, எடைகுைல் ஆகியவை இதற்குண்டான அறிகுறிகளாகும். இந்தப் பாதிப்பு உள்ளவா்களுக்கு நடமாடும் நுண்கதிா் மூலம் எக்ஸ்ரே எடுக்கப்பட்டு, சளி பரிசோதனை மேற்கொண்டு காசநோய் உள்ளவா்களுக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சத்தான உணவுக்கு போஜன் யோஷனா திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 500, உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1,000 வழங்கப்படுகிறது என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், காசநோய் துணை இயக்குநா் ஆா். நெடுஞ்செழியன், மருத்துவமனை கண்காணிப்பாளா் அா்ஜுனன், இருக்கை மருத்துவ அலுவலா் கலா உள்பட பலா் பங்கேற்றனா்.