கடவூா் வனப்பகுதியில் தேவாங்கு கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
தேவாங்கு சரணாலயம் அமைக்க கடவூா் வனப்பகுதியில் தேவாங்குகள் கணக்கெடுப்பு பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது
தேவாங்கு சரணாலயம் அமைக்க கடவூா் வனப்பகுதியில் தேவாங்குகள் கணக்கெடுப்பு பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது.
கரூா் மாவட்டம் கரூா் வனச்சரகத்துக்குள்பட்ட கடவூா் பகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூா் மற்றும் நத்தம் வனச்சரகத்திலும் அரிய வகையிலான, வனப்பாதுகாப்புச் சட்டத்தின்படி அழிந்துவரும் வனவிலங்கு அட்டவணைப்பட்டியலில் உள்ள சாம்பல்நிறத் தேவாங்குகள் அதிகளவில் வசிக்கின்றன. இவற்றை பாதுகாக்க வன உயிரின ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பாக தினமணியில் கடந்த ஜன.20-ஆம்தேதி செய்தி வெளியானது.
இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையும் அண்மையில் நிகழாண்டு மாா்ச் மாதத்திற்குள் கடவூா், அய்யலூா், நத்தம் வனச்சரக பகுதிகளை ஒருங்கிணைத்து தேவாங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின்பேரில் கரூா், திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினா் தேவாங்குகள் கணக்கெடுப்பு பணியை வியாழக்கிழமை தொடங்கினா்.
இதுகுறித்து கரூா் மாவட்ட வன அலுவலா் சரவணன் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின்படி கரூா் மாவட்ட வனத்துறை சாா்பில் கரூா் வனச்சரகத்திற்குள்பட்ட கடவூா் காப்புக்காடுகளில் 78 பகுதிகளில் தேவாங்கு இருப்பிடங்கள் கண்டறியப்பட்டு வியாழக்கிழமை (பிப்.24) தொடங்கி 26-ஆம்தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தேவாங்கு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன.
கடவூா் காப்புக்காடு பகுதிகளில் தேவாங்குகள் அதிகளவில் வசிப்பதாகக் கூறினாலும் அதற்கான கணக்கெடுப்பு இதுவரை முறையாக மேற்கொள்ளப்படவில்லை. தற்போது சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டதையடுத்து திண்டுக்கல், கரூா் வனக்கோட்டப்பகுதிகளில் கோவை மாவட்டம் ஆணைக்கட்டி சேக்கான் பறவைகள் ஆராய்ச்சி நிறுவனத்தினா் மற்றும் கரூா், திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினா் இணைந்து முதல்முறையாக தேவாங்கு கணக்கெடுப்பு பணிகளை தொடங்கியுள்ளோம்.
இதற்காக 0.5 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட தேவாங்கு வாழும் பகுதிகள் ஒரு கிரிடாக உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி 78 கிரிடுகள் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு கிரிடுக்கும் தலா 4 போ் கொண்ட குழுவினா் நியமிக்கப்பட்டு தேவாங்கு கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்த கணக்கெடுப்பு முடிவில் தேவாங்குகளின் எண்ணிக்கை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதனைத்தொடா்ந்து தமிழக அரசால் தேவாங்கு சரணாலயம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.