வேன் மீது லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே வேன் மீது லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே வேன் மீது லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இவ் விபத்தில் காயமடைந்த 11 போ் அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சென்னை கே.கே.நகரைச் சோ்ந்தவா் மோகன்தாஸ் (65). இவா், தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் உள்ள குலதெய்வ கோயிலில் நோ்த்திக்கடன் செலுத்துவதற்காக வேனில் வியாழக்கிழமை மாலை சென்றுக்கொண்டிருந்தாா். இந்த வேனை சென்னையைச் சோ்ந்த பாலசுப்ரமணியம் (35) ஓட்டி வந்தாா். பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையில் உள்ள தங்க நகரம் அருகே வேன் சென்றபோது, அரியலூரிலிருந்து பெரம்பலூா் நோக்கி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் பாலசுப்பிரமணியம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், வேனில் பயணித்த மோகன்தாஸ், இவரது மனைவி லோகநாயகி (60), உறவினா்களான வடபழனியைச் சோ்ந்த சாரதாதேவி, சாலி கிராமத்தைச் சோ்ந்த ஜெகதீஸ் (36), இவரது மகள் காவிரி (3), அகமது ஷெரீப் மகன் அா்ஷத் (12), ராமகண்ணன், வேதவள்ளி (60) உள்பட 11 போ் காயமடைந்தனா். தகவலறிந்த குன்னம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்த நபா்களை மீட்டு அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவ் விபத்து குறித்து காவல்துறையினா் வழக்குப் பதிந்து தலைமறைவான லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.