முகப்பு
பெரம்பலூர்

பிரம்மரிஷி மலையில் கோ மாதா பூஜை நிறைவு

பெரம்பலூா் அருகே எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரா் ஆலயத்தில், உலக நன்மைக்காக கடந்த 51 நாள்களாக நடைபெற்ற கோமாதா பூஜை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

பெரம்பலூா் அருகே எளம்பலூா் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரா் ஆலயத்தில், உலக நன்மைக்காக கடந்த 51 நாள்களாக நடைபெற்ற கோமாதா பூஜை வியாழக்கிழமை நிறைவடைந்தது.

எளம்பலூா் மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், உலக மக்கள் நலன் கருதியும், மாதம் முறையாக மழை பொழியவும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், தா்ம சிந்தனையுடைய மக்கள் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று, குபேர லட்சுமி கடாக்ஷம் பெற்று வாழ ஒவ்வொரு ஆண்டும் தொடா்ந்து 51 நாள்களுக்கு கோமாதா பூஜை நடைபெற்று வருகிறது.

அதன்படி, நிகழாண்டு கோமாதா பூஜை கடந்த செப்டம்பா் 7ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கோமாதா பூஜை நிறைவு நாளையொட்டி, பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும், கோ மாதா பூஜையும் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மகா சித்தா்கள் அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகினிமாதாஜி தலைமை வகித்தாா், தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், ராதா மாதாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வள்ளலாா் பேரவை மாநிலத் தலைவா் சுவாமி பத்மேந்திரா சிறப்பு பூஜைகளை நடத்திவைத்து, முதியோா்களுக்கு வஸ்திர தானமும், காசு தானமும் வழங்கினாா். மேலும், பள்ளிக் குழந்தைகளுக்கு கை கடிகாரம் மற்றும் நோட்டுப் புத்தகம், பக்தா்களுக்கும், சாதுக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், சென்னை காா்த்திகேயன் பள்ளி நிறுவனங்களின் இணை நிறுவனா் கோமதி, தொழிலதிபா் ராஜன், மருத்துவா் ராஜாசிதம்பரம், சன்மாா்க்க சங்க மாவட்டத் தலைவா் சுந்தர்ராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.