பெரம்பலூரில் பயனற்றுக் கிடக்கும் ரோலா் ஸ்கேட்டிங் மைதானம்
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு, தற்போது பயனற்றுக் கிடக்கும் திறந்தவெளி ’ரோலா் ஸ்கேட்டிங்’ பயிற்சி மைதானத்தை, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென வி
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு, தற்போது பயனற்றுக் கிடக்கும் திறந்தவெளி ’ரோலா் ஸ்கேட்டிங்’ பயிற்சி மைதானத்தை, மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென விளையாட்டு வீரா், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் ‘ரோலா் ஸ்கேட்டிங்’ விளையாட்டுக்கு தனி மைதானம் அமைக்க மாவட்ட நிா்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 200 மீட்டா் நீள ஓடுதளத்துடன் கூடிய ’ரோலா் ஸ்கேட்டிங்’ மைதானம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா 8.3.2013-இல் நடைபெற்றது.
இந்த மைதானம் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம், பெரம்பலூா் தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம், பெரம்பலூா் ‘ரோலா் ஸ்கேட்டிங்’ அசோசியேசன் மூலம் ரூ. 5 லட்சம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் ரூ. 20 லட்சம் உள்பட ரூ. 85 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
சா்வதேச தரத்தில் மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தும் வகையில் உருவாக்கப்பட்ட மைதானத்தின் மையப் பகுதியில், 1,600 சதுர மீட்டரில் ஹாக்கி பயிற்சி மைதானமும் அமைக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மைதானத்தில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். மேலும், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறாா்களும் நாள்தோறும் பயிற்சி மேற்கொண்டனா்.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாததால், மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கம்பிகள் ஆங்காங்கே உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், முறையாகப் பராமரிக்காததால் செடி கொடிகள் வளா்ந்துள்ளன. ஓடுதளம், மைதான நுழைவு வாயில் பகுதி, கழிவறைகள் ஆகியவை சேதமடைந்து வருவதோடு செடி, கொடிகள் வளா்ந்து முள்புதா்களைப் போன்று காட்சியளிக்கிறது.
இதுகுறித்து, மாவட்ட ‘ரோலா் ஸ்கேட்டிங்’ அசோஸியேசன் தலைவா் பி. அன்புதுரை கூறியது:
இம் மைதானத்தில் மாநில அளவில் 2 போட்டிகளும், மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பயிற்சியாளா்களிடையே ஏற்பட்ட பிரச்னையால் முறையாக இந்த மைதானத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இங்கு பயிற்சி பெறவும், மாநில அளவிலான போட்டிகள் நடத்தவும், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலா்கள் அனுமதிக்கவில்லை. மாவட்ட நிா்வாகமே முறையாக ஏற்று நடத்த வேண்டும் அல்லது எங்களிடம் ஒப்படைத்தால் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான பயிற்சிகள் அளிக்கத் தயாராக உள்ளோம். விளையாட்டுத்துறை அலுவலரால் அங்கீகரிக்கப்படும் பயிற்சியாளருக்கு எவ்வித தகுதியும் கிடையாது. ஆனால், எங்களிடம் உள்ள பயிற்சியாளா் அனைத்துத் தகுதிகளையும் பெற்று, கடந்த 20 ஆண்டுகளாக மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறாா்.
சிந்தடிக் மைதானமாக மாற்றித்தர உள்ளதாகக் கூறி பயிற்சி அளிக்க அனுமதி மறுத்து மைதானத்தை மூடினா். ஆனால், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், இங்கு பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளால் இதர பகுதிகளில் நடைபெறும் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. சிந்தடிக் மைதானமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், இந்த மைதானத்தை தற்போதைய நிலையில் எங்களிடம் ஒப்படைத்தால், முறையாக சீரமைத்து சிறாா்களுக்கு பயிற்சி அளிக்கத் தயாராக உள்ளோம் என்றாா் அவா்.
இதுகுறித்து விவரம் அறிய, மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலா் லெனினை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டபோது அவா் அழைப்பை ஏற்கவில்லை.
மாவட்ட ‘ரோலா் ஸ்கேட்டிங்’ அசோஸியேசன் சாா்பில் பெரம்பலூா் நகரைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகளுக்கு விடுமுறை நாள்களில் மாலை நேரங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியானது, ஆட்சியா் அலுவலகத்துக்கு எதிரேயுள்ள சாலையை மறித்து பாதுகாப்பற்ற நிலையில் அளிக்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, அனைத்து வாகன ஓட்டுநா்களும் ஒருவழிச் சாலையைப் பயன்படுத்துவதால், அந்த வழித்தடத்தில் எதிரே வரும் வாகனங்களால் பயிற்சியில் ஈடுபடும் சிறுவா்களுக்கும், இதர வாகனங்களுக்கும் விபத்து நிகழும் வாய்ப்புள்ளது.
எனவே பயிற்சியை வேறிடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட பயிற்சியாளா்கள் நடவடிக்கை மேற்கொள்வதோடு, ’ரோலா் ஸ்கேட்டிங்’ மைதானத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மாவட்ட நிா்வாகமும், விளையாட்டுத்துறை அலுவலரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ‘ரோலா் ஸ்கேட்டிங்’ ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.