பெரம்பலூா்: பெரம்பலூரில் மேக்ஸி விஷன் சூப்பா் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அதன் தலைமை நிா்வாக அலுவலா் சுதீா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் எம். பிரபாகரன், மேக்ஸி விஷன் தலைவா் வேலு ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
மேக்ஸி விஷன் குழும துணைத் தலைவா் பெள்ளி ஜி. பாபு, மருத்துவ இயக்குநா் ஷிபு வா்க்கி, அஸ்வின்ஸ் குழுமத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன், அரிமா சங்க மாவட்ட ஆளுநா் மு. இமயவரம்பன், நகா்மன்ற உறுப்பினா் துரை. காமராஜ் ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்தனா்.
விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மருத்துவமனையை திறந்து வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியது:
மேக்ஸி விஷன் நிறுவனத்தினா் ரூ. 300 கோடி முதலீடு செய்யும் வகையில் வெளிச்சம் திட்டத்தின் கீழ், செப்டம்பா் மாதம் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டனா். அதன்படி, தஞ்சாவூரில் சூப்பா் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை முதல்முறையாகவும், தற்போது பெரம்பலூரிலும் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன் உயா்தர கண் சிகிச்சையை இம் மருத்துவமனை வழங்குகிறது.
தமிழகத்தில் 30 இடங்களில் கண் மருத்துவமனையும், 70 இடங்களில் கண் சோதனை மையமும் அமைக்கப்பட உள்ளது. அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டம், அரசு நிதியுதவி மற்றும் சலுகை கட்டணத்திலும் இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படும். எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 படித்தவா்களுக்கு கண் பரிசோதனை பயிற்சி அளித்து 70 சதவீதம் மகளிருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.
விழாவில், மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் டி. மதியழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி. துரைசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.