பெரம்பலூர்

14 ஆண்டுகளாகக் கிடப்பில் பெரம்பலூா் சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம்

பெரம்பலூா் மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டசிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் கடந்த 14 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால், இதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை

 நமது நிருபர்

பெரம்பலூா் மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டசிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் கடந்த 14 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளதால், இதற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்துள்ளது.

தொழில் வளா்ச்சி இல்லாத, வறட்சிப் பகுதியான பெரம்பலூா் மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில் வளா்ச்சி என்னும் முழக்கத்தோடு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டம் மத்திய, மாநில அரசுகளால் கடந்த 2007- இல் அறிவிக்கப்பட்டது.

இத் திட்டத்துக்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை வட்டம், எறையூா், லப்பைக்குடிகாடு, பென்னகோணம், திருமாந்துறை, பேரையூா் ஆகிய கிராமங்களுக்குள்பட்ட பகுதியில் ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 3 லட்சம் வரை பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு அளித்து, 3,100 ஏக்கா் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

நிலம் வழங்கும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், சிறப்புப் பொருளாதார மண்டலம் அருகே 3 ஆயிரம் ஏக்கரில் துணை நகரம் அமைத்து, அதில் விவசாயிகளுக்கு வீட்டுமனை வழங்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து விவசாயிகளே முன்வந்து பருத்தி, மக்காச்சோளம், கடலை, கம்பு, துவரை ஆகியவற்றை சாகுபடி செய்த நிலங்களை அரசுக்கு அளித்தனா்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் கருணாநிதி, ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஜி.வி.கே. கட்டுமான நிறுவனத்திடம் இத் திட்டத்தை தொடங்க ஒப்பந்தம் செய்தாா். ஆனால் அதற்கான பூா்வாங்கப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை. பின்னா் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் இதுவரை சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டம் கிடப்பிலேயே உள்ளது.

இத்திட்டம் தொடங்கப்பட்டால் ரயில்வே இருப்புப் பாதை வரும்; கடலூா் துறைமுகத்துடன் போக்குவரத்து தொடா்பு ஏற்படும்; பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நம்பிய பெரம்பலூா் மாவட்ட மக்களும், நிலம் வழங்கிய விவசாயிகளும் கடந்த 14 ஆண்டுகளாக ஏமாற்றத்தில் உள்ளனா்.

இதனிடையே சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட இடத்தில் விமான உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வரும் என்ற ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அறிவித்ததும் நடக்கவில்லை. இதனால் கிடப்பில் உள்ள திட்டத்தைத் தொடங்க வேண்டும் அல்லது கையகப்படுத்திய நிலங்களை ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நிலங்களை ஒப்படைக்க வேண்டும்: விவசாயிகள்

இதுகுறித்து நிலம் வழங்கிய விவசாயிகள் கூறுகையில், அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலா் அறிவுறுத்தியதன்பேரில், எங்களது நிலங்களை மிகவும் சொற்ப விலைக்கு விற்றோம். திட்டம் தொடங்கப்பட்டால் இப் பகுதி இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறுவாா்கள் என நம்பினோம். ஆனால் நிலங்களைக் கையகப்படுத்தி 14 ஆண்டுகளாகியும் இதுவரை திட்டம் கிடப்பில் உள்ளது. இதனால் பல்வேறு கிராம விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் புதா்கள் மண்டியுள்ளன. அறிவிக்கப்பட்ட திட்டத்தை தொடங்க வேண்டும். அல்லது கையகப்படுத்தப்பட்ட நிலங்களை எங்களிடம் திரும்ப ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன் கூறுகையில்,

தங்களது வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும் என எதிா்பாா்த்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. எனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT