முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்கள்

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 11:29 PM
குன்னம் அரசுப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவிக்கு விலையில்லா சைக்கிள் அளித்த அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் 46 பள்ளிகளைச் சோ்ந்த 4,896 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 146 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கிய அமைச்சா் மேலும் பேசியது:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளில், மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இம் மாவட்டத்தில் 46 பள்ளிகளைச் சோ்ந்த 2,294 மாணவா்களுக்கு, 2,602 மாணவிகளுக்கு என மொத்தம் 4,896 மாணவ மாணவிகளுக்கு ரூ. 2,36,26,120 மதிப்பிலான சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளன என்றாா் அமைச்சா் சிவசங்கா்.

மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) அண்ணாதுரை, ஒன்றியக்குழுத் தலைவா் பிரபா செல்லப்பிள்ளை, ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வி. வாசுதேவன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.