முகப்பு
பெரம்பலூர்

அடிப்படை வசதிகள் கோரி அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 8:47 PM
அடிப்படை வசதிகள் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி கல்லூரி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா். இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுக்குத் தேவையான கழிவறை, குடிநீா், விளையாட்டு மைதானம், சாலை வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டுமென, கடந்த சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுதொடா்பாக, மாணவா்கள் சாா்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்ற போராட்டத்தின்போது பேச்சு வாா்த்தையில் ஈடுபட்ட சாா் ஆட்சியா் சு. கோகுல், மாணவா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தாா்.

ஆனால், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் விளையாட்டு மைதானம், சுகாதாரமான குடிநீா், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தர மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாணவா்கள் சங்க மாவட்டத் தலைவா் கோகுலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஆா்ப்பாட்டம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சாா் ஆட்சியா் சு. கோகுல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுடன் பேச்சு வாா்த்தை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடா்ந்து, காத்திருப்புப் போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகள் கலைந்துசென்றனா்.