முகப்பு
பெரம்பலூர்

மாநில வேலைவாய்ப்பு முகாமில் 500 பேருக்கு பணி வாய்ப்பு கடிதம்

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாமில் 500 பேருக்கு பணி வாய்ப்பு

Updated On : 12 ஜூலை, 2024 at 9:31 PM
பகிர்:

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் தோ்ந்தெடுக்கப்பட்ட 500 மாணவ, மாணவிகளுக்கு பணி வாய்ப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மனிதவள மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தொடக்கி வைத்தாா்.

முகாமில், திருச்சி, கோவை, தஞ்சாவூா், திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து 35-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று நோ்முகத் தோ்வை நடத்தின. இதில், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் உள்ள 15 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 பொறியியல் கல்லூரிகளைச் சோ்ந்த சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட நான் முதல்வன் (சிறப்புத் திட்டம்) ஒருங்கிணைப்பாளா் கிரண் பிரகாஷ், பெரம்பலூா் மாவட்ட உதவி இயக்குநா் ஆ. செல்வம் ஆகியோா் முன்னிலையில் பல்வேறு கட்டத் தோ்வுகள் நடத்தப்பட்டு, 500 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, பணி வாய்ப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் முனைவா் நா. வெற்றிவேலன் வரவேற்றாா். நான் முதல்வன் திட்ட கல்லூரி ஒருங்கிணைப்பாளரும், மனிதவள மேம்பாட்டு அலுவலருமான வ. சந்திரசௌத்ரி நன்றி கூறினாா்.