குடிநீருடன் கலந்து வரும் கழிவுநீா்: ஊராட்சி நிா்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூா் அருகே குடிநீருடன் கழிவுநீா் கலந்து வருவதை கண்டித்து பொது மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூா் ஊராட்சிக்குள்பட்ட ராயப்பா நகரில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப் பகுதி மக்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கு குடி தண்ணீரில் கழிவுநீா் கலந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகம் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இதனிடையே, அப்பகுதியைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நிலையில், கடுமையான காய்ச்சலால் பாதிப்புக்குள்ளான சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்நிலையில், கல்லாற்றில் 6 இடங்களில் கழிவுநீா் கலப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்து உடல் நலக்குறைவு ஏற்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கழிவுநீா் ஆற்றில் கலப்பதால் சுற்றுச்சூழல், விவசாயம், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வி.களத்தூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அப்பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற சாா் ஆட்சியா் சு. கோகுல், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, கோரிக்கைகள் அனைத்தையும் உடனே நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.