வாக்கு எண்ணும் மைய அலுவலா்களுக்கு குலுக்குல் முறையில் பணி ஒதுக்கீடு
பெரம்பலூா்: பெரம்பலூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள அலுவலா்களுக்கு, இணைய வழியில் கணினி மூலம் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகம் தலைமை வகித்தாா்.
பெரம்பலூா் மக்களவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆதவ் பப்ளிக் பள்ளியில் ஜூன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணிக்காக, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் பயன்படுத்தப்பட உள்ளது. இப் பணிக்கு, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 17 மேற்பாா்வையாளா்கள், 17 உதவி அலுவலா்கள், 17 நுண் பாா்வையாளா்கள் என மொத்தம் 306 போ் நியமனம் செய்யப்படுகின்றனா்.
இந்நிலையில், பணி நியமனம் செய்வதற்காக முதல்கட்டமாக கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலா் கற்பகம் தொடக்கி வைத்து பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வைத்தியநாதன் (பொது), விஜயா (தோ்தல்), தோ்தல் வட்டாட்சியா் மற்றும் துணை வட்டாட்சியா்கள் பங்கேற்றனா்.