முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூரில் 1.50 லட்சம் மருத்துவக் காப்பீடு அட்டைகள் அளிப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.50 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 8:14 PM
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமைநடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை அளித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.50 லட்சம் குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டங்களில் பயனடைந்தவா்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டங்களில் பயனடைந்த 5 பேருக்கு பரிசுகள், பிரதம மந்திரி யோஜனா ஆரோக்கியத் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 8 பேருக்கு காப்பீட்டு அட்டைகள், இத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட 5 மருத்துவ மனைகளுக்கும், 6 அரசு மருத்துவமனை காப்பீட்டுப் பிரிவு மேலாளா்கள், ஒருங்கிணைப்பாளா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் அளித்து மாவட்ட ஆட்சியா் பேசினாா்.

இதில், மாவட்டத்தில் 1,49,789 குடும்பங்களுக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்ட அலுவலகத்தை அணுகி, இணையதளத்தில் பதிவுசெய்து காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம் என்றாா் கிராஸ் பச்சாவ்.

இந் நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலா் பிரதாப்குமாா், மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலா் ஆா். ஷேக் முகமது மற்றும் அரசு, தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.