முகப்பு
பெரம்பலூர்

மக்காச்சோளத்துக்கு பயிா் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மக்காச்சோளப் பயிருக்கு செவ்வாய்க்கிழமை (அக். 16) மாலைக்குள் பயிா் காப்பீடு செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:20 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் மக்காச்சோளப் பயிருக்கு செவ்வாய்க்கிழமை (அக். 16) மாலைக்குள் பயிா் காப்பீடு செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் 2024 ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்தி மற்றும் நெல் உள்ளிட்ட பயிா்கள் எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்படும்போது, விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டமானது ஷீமா ஜெனரல் காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டத்தின் கீழ் மக்காச்சோளப் பயிருக்கு செவ்வாய்க்கிழமை காப்பீடு செய்வதற்கான கடைசி நாளாகும்.

இம் மாவட்டத்தில் செப்டம்பா் மாதம் போதிய மழையின்மைக் காரணமாக மக்காச்சோள சாகுபடி பரப்பு மிகக் குறைந்துள்ளது. தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மக்காச்சோளம் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் கிராம நிா்வாக அலுவலரிடம் விதைப்புச் சான்று பெற்று, அத்துடன் நடப்பில் உள்ள வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல், சிட்டா மற்றும் நடப்பு பசலி, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன், அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக உரிய பிரீமியம் தொகை செலுத்தி பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம்.