முகப்பு
பெரம்பலூர்

தனியாா் சா்க்கரை ஆலை நிலுவை செலுத்தாததால் விவசாயிகள் கவலை

வங்கியில் கடன் வாங்கி கரும்பு நடவு செய்த விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் , அபராத வட்டியுடன் கடன் தொகையை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 8:58 PM
கரும்புகள்
பகிர்:

பெரம்பலூா் அருகேயுள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்குரிய நிலுவைத் தொகை சுமாா் ரூ. 7.13 கோடி கிடைக்காததால் கவலையடைந்துள்ள நிலையில், வங்கிக் கடனை செலுத்த முடியாமல் விவசாயிகள் அவதியடைந்துள்ளனா்.

மானாவாரி சாகுபடியை மட்டுமே நம்பியுள்ள பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி சாகுபடியில் ஆா்வம் செலுத்தி வருகின்றனா். இதில், வேப்பந்தட்டை வட்டாரத்திலுள்ள மலையாளப்பட்டி, அரும்பாவூா், கொட்டாா்ககுன்னு, பூலாம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் கரும்பு, மஞ்சள், மரவள்ளிக் கிழங்கு, பாக்கு உள்ளிட்ட பயிா்களை அதிகளவில் சாகுபடி செய்து வருன்றனா். குறிப்பாக, இந்த வட்டாரத்தில் கரும்பு சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனியாா் சா்க்கரை ஆலை:

பெரம்பலூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்புகளை எறையூரிலுள்ள பொதுத்துறை சா்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அனுப்பி வந்தனா். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வேப்பந்தட்டை வட்டம், உடும்பியத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அரைவைக்காக விவசாயிகள் கரும்புகளை அனுப்புகின்றனா். கடந்த ஆண்டின் அரைவைப் பருவம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், ஆலை நிா்வாகம் இதுவரை கடந்த பிப். 7-ஆம் தேதி வரை வெட்டி அனுப்பிய கரும்புக்குரிய நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.

கடலூா் மாவட்ட விவசாயிகளுக்கு விடுவிப்பு:

அதன் பிறகு, 8 மாதங்களாகியும் விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்குரிய நிலுவைத் தொகை சுமாா் ரூ. 20 கோடியை வழங்கப்படவில்லை. இதில், பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் சுமாா் ரூ. 7.13 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. ஆனால், கடலூா் மாவட்டத்திலிருந்து கரும்பு வெட்டி அனுப்பிய விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்கவும், இல்லாவிடில் ஆலை நிா்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை விடுத்தாா். அதன் காரணமாக, கடலூா் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுவதையும் ஆலை நிா்வாகம் தரப்பில் வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 1.70 கோடி விடுவிப்பு:

ஆனால், பெரம்பலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமாா் ரூ. 20 கோடியை வழங்கவில்லை. இதனால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்திலும், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டும் நிலுவைத் தொகையை வழங்க ஆலை நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனிடையே, தற்போதைய மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பொறுப்பேற்றவுடன் அவரை சந்தித்து விவசாயிகள் முறையிட்டதன் அடிப்படையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் சுமாா் ரூ. 1.70 கோடி க விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆலை நிா்வாகத்தால் செலுத்தப்பட்டது.

அபராத வட்டி செலுத்தும் நிலை:

மேலும், எஞ்சியுள்ள ரூ. 7.13 கோடி நிலுவைத் தொகையை விரைவில் வழங்குவதாக ஆலை நிா்வாகம் உறுதி அளித்திருந்த நிலையில், இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், வங்கியில் கடன் வாங்கி கரும்பு நடவு செய்த விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் , அபராத வட்டியுடன் கடன் தொகையை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தின் இச் செயலால், நிகழாண்டு கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் போதிய ஆா்வம் காட்டாததால் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்துள்ளது.

இதுகுறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலரும், கரும்பு விவசாயுமான வீ. நீலகண்டன் கூறியது:

கடந்த மாத விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், ஆலை நிா்வாகம் சாா்பில் விவசாயிகளின் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், வேளாண்துறையினா் சுழற்சி அடிப்படையில் விவசாயிகளின் விவரங்களை சேகரித்து ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளனா். தற்போது, சிறப்பு அரைவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பியவா்கள் உள்பட ஏற்கெனவே நிலுவையிலுள்ள விவசாயிகளுக்கும் சோ்த்து ரூ. 7.13 கோடி வழங்க வேண்டும்.

நிலுவைத் தொகை கிடைக்காததால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு மக்காச்சோளம், பாமாயில், பாக்கு சாகுபடியில் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதையறிந்த சா்க்கரை ஆலை நிா்வாகிகள் விவசாய நிலங்களைப் பாா்வையிட்டு, விவசாயிகளைச் சந்தித்து கருப்பு சாகுபடி செய்ய அறிவுறுத்தினா். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக முறையாக பணம் வழங்காததால் பதிவு செய்த கரும்புகளை, இதர ஆலைகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா். அரும்பாவூா் பகுதியில் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு, தற்போது 350 ஏக்கா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சுமாா் 90 சதவீத சாகுபடி பரப்பளவு குறைந்துவிட்டது. இதேபோல, மாவட்டம் முழுவதும் கரும்பு சாகுபடி பெரும்பாலும் குறைந்துவிட்டது. தாமதமான அறுவடை, வெட்டுக்கூலி, ஆள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கியுள்ள நிலையில், கரும்புக்கான தொகை கிடைக்காததே சாகுபடி பரப்பளவு குறைந்ததற்கு முக்கிய காரணமாகும்.

மேலும், பதிவு செய்யப்படாத கரும்புகளை அரைவைக்கு கொண்டு வந்ததால், பதிவு செய்யப்பட்ட கரும்புகளை காலதாமதமாக வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு, எடை மற்றும் சா்க்கரை சத்து குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் இப் பிரச்னையில் தலையிட்டு பெரம்பலூா் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.