முகப்பு
பெரம்பலூர்

பெரம்பலூா் காவல் துறையில் சட்ட ஆலோசகா் பணி

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சட்ட ஆலோசகா் பணிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 10:25 PM
பகிர்:

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சட்ட ஆலோசகா் பணிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இப் பணிக்கு விண்ணப்பிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில், இளங்கலை சட்டம் (பி.எல்) முடித்திருக்க வேண்டும். அல்லது, அதற்கு இணையான எல்.எல்.எம், எல்.எல்.பி, பி.காம் எல்.எல்.பி, பி.சி.ஏ எல்.எல்.பி, பி.பி.ஏ எல்.எல்.பி ஆகிய படிப்பில் ஏதேனும் ஒன்று முடித்து, தமிழ்நாடு வழக்குரைஞா் கழகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

மேலும், ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் வழக்குரைஞராக பணிபுரிந்திருக்க வேண்டும். எவ்வித குற்ற வழக்குகளிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது. இப் பதவிக்கு, ஓராண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே தோ்வு செய்யப்படுவா். ஒப்பந்த காலமானது விண்ணப்பதாரரின் செயல்திறன் அடிப்படையிலேயே அமையும். பணி திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் ஒப்பந்தகாலம் முடிவடையும் முன்பே எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரால் கோரப்படும் சட்ட ரீதியான கருத்து, கருத்துரை மற்றும் அனைத்து வகையான சட்ட நிகழ்வுகளுக்கும் சட்ட கருத்துரை வழங்க வேண்டும். தோ்வு செய்யப்படுவோருக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ. 26 ஆயிரம் வழங்கப்படும். இப் பணியானது தற்காலிகமானது என்பதால் பதவி, பணிநிரந்தரம் கோர இயலாது.

இத் தகுதியுடையோா் செப். 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து மற்றும் நோ்காணல் தோ்வு நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும். விருப்பமுள்ள நபா்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் தங்களது விண்ணப்பத்தை நேரில் அல்லது அஞ்சல் மூலமாக சமா்ப்பிக்கலாம்.