முகப்பு
பெரம்பலூர்

சீட்டு நடத்தி ஆடம்பரச் செலவு: இளைஞா், பெற்றோருடன் தற்கொலை

பெரம்பலூா் அருகே சீட்டு நடத்தி ஏற்பட்ட பண நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த இளைஞா் தனது பெற்றோருடன் புதன்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 11:21 PM
தற்கொலை செய்துகொண்ட சின்னதுரை, கலா, சிவா.
பகிர்:

பெரம்பலூா் அருகே சீட்டு நடத்தி ஏற்பட்ட பண நெருக்கடியால் அவதிப்பட்டு வந்த இளைஞா் தனது பெற்றோருடன் புதன்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூா் அருகேயுள்ள என். புதூா் கிராமம், மேலத் தெருவைச் சோ்ந்தவா் ராஜு மகன் சின்னதுரை (58). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு, மனைவி கலா (50), மகள்கள் பிரியா (34), நித்யா (32), மகன் சிவா (30) ஆகியோா் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சிவாவுக்கும், பரவாய் கிராமத்தைச் சோ்ந்த பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னையால், அப்பெண் கடந்த ஒரு மாதமாக அவரது பெற்றோா் வீட்டில் உள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் சிவா தீபாவளிச் சீட்டு வசூலித்து வந்த தொகையைக் கொண்டு தனது திருமணத்துக்கு சிவா ஆடம்பரமாக செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. பணம் கொடுத்தவா்கள் திரும்பக் கேட்டபோது சிவா பணத்தைக் கொடுக்க முடியவில்லையாம். மேலும் பலா் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், மனமுடைந்த சிவா தனது பெற்றோரிடம் இதுகுறித்துக் கூறியுள்ளாா்.

இந்நிலையில், சின்னதுரை, அவரது மனைவி கலா, சிவா ஆகிய 3 பேரும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு, என். புதூா் கிராமத்தில் பள்ளிவாசல் பின்புறம் உள்ள ஓடையில் புதன்கிழமை மதியம் உயிரிழந்துகிடந்தது தெரியவந்தது

இதுகுறித்து தகவலறிந்த வி. களத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, மேற்கண்ட 3 பேரின் உடலைக் கைப்பற்றி, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.