சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தூய்மைக் காவலா்கள் 64 பேரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
கரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் மற்றும் மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்களுக்கு, சத்துணவு ஊழியா்களுக்கு இணையான அனைத்து சலுகையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கும் வரை, சென்னை பனகல் மாளிகை முன்பு திங்கள்கிழமை முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி, இப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 57 பெண்கள் உள்பட 64 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை செல்ல முயன்றனா். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட 64 பேரை பெரம்பலூா் போலீஸாா் கைது செய்து பெரம்பலூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்திருந்து திங்கள்கிழமை காலையில் விடுவிக்கப்பட்டனா்.