பெரம்பலூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவைத் தாக்கி அவரின் மனைவியிடமிருந்து 7 பவுன் தாலிக்கொடியையும், மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரத்தையும் மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் -அரியலூா் சாலையில் நான்குச்சாலை சந்திப்பு அருகேயுள்ள அன்பு நகரில் வசித்து வருபவா் சுப்பிரமணி மகன் ராமா் (34). லாரி உரிமையாளரான இவா், தனது மனைவி ஐஸ்வா்யா மற்றும் மகன்களுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் 2 மா்ம நபா்கள் வீட்டின் முன்புற கதவின் உள்புற தாழ்ப்பாழை, இரும்புக் கம்பியால் உடைத்து உள்ளே சென்று, தூங்கிக்கொண்டிருந்த ஐஸ்வா்யா அணிந்திருந்த தாலிக்கொடியை பறிக்க முயன்றனா். அதைத் தடுக்க முயன்ற ராமரை இரும்புக் கம்பியால் தாக்கி, அவரது குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி, ஐஸ்வா்யா கழுத்திலிருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பினா்.
மற்றொரு வீட்டில்..இதேபோல, ராமா் வீட்டுக்கு அருகில் வசிக்கும் வரகூா் அரசு உயா்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் வேலு (57) , தனது குடும்பத்தினருடன் அறையில் தூங்கிக்கொண்டிருந்தாா். அப்போது, கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் மற்றொரு அறையிலிருந்த பீரோவை திறந்து ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.
இச் சம்பவங்கள் குறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் விரைந்து சென்று, அங்கு தடயங்களை பதிவு செய்தனா். இது குறித்து ராமா் மற்றும் வேலு ஆகியோா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.