பெரம்பலூா் நகா் மற்றும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும், நீா்நிலைகளிலும் கொட்டப்படும் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதோடு, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
பெரம்பலூா் நகரில் உள்ள பழைய பேருந்து நிலைய வளாகம், எளம்பலூா் சாலை, வடக்குமாதவி சாலை, வாரச்சந்தை மைதானம், துறையூா் சாலை, விளாமுத்தூா் பிரிவு சாலை சந்திப்புப் பகுதி, பாலக்கரை, புகா் பேருந்து நிலையம் எதிரிலிருந்து அருமடல் பிரிவுச் சாலை வரையிலான பகுதிகளில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட கோழி, ஆடுகள் மற்றும் மீன் இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இக் கடைகளில் சேரும் இறைச்சிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் காலி சிமென்ட் சாக்கு பைகளில் மூட்டைகளாக கட்டி வைக்கின்றனா். இக் கழிவுகள் அதிக அளவில் சோ்ந்தவுடன், இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாதபோது நகரைச் சுற்றி அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் வீசிச் செல்கின்றனா்.
கடைகள், பெரும் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் சாலை ஓரங்களில் கொட்டப்படுகிறது. குறிப்பாக, பெரம்பலூா் புறவழிச்சாலை, ஆத்தூா் சாலையிலுள்ள மின் தகனமேடை, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டப்படுகின்றன.
பாதிக்கப்படும் நீா்நிலைகள்:
மேலும் சிலா் எசனை ஏரிக்கரை, அகரம் சீகூா் ஏரிக்கரை, பாடாலூா் ஏரி, மருதையாறு கால்வாய் உள்ளிட்ட நீா்நிலைகளிலும் இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள், குப்பைகளை கொட்டுவதால் நீா்நிலைகள் மாசடைந்து, சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது.
சாலையோரங்களில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளை உண்பதற்காக சுற்றித் திரியும் நாய்கள் சிமென்ட் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பிரித்து சாலை முழுவதும் சிதறி விடுவதால், சாலை முழுவதும் துா்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இறைச்சிக் கழிவுகளுக்காக சுற்றித்திரியும் நாய்கள் திடீரென சாலையில் ஓடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்வோா் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனா். மேலும், சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பைகளை சிலா் தீயிட்டு எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநா்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
நோய்த்தொற்று பரவும் அபாயம்:
பெரம்பலூா் நகா்ப்புறம் மட்டுமின்றி, கிராமப்புறச் சாலை ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளால் கடுமையான சுகாதாரச் சீா்கேடு, துா்நாற்றம், கொசு உற்பத்தி மற்றும் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
சுற்றுச்சூழல் பாதிப்பு:
சாலையோரங்கள் அல்லது நீா்நிலைகளில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைக் கழிவுகளை அகற்றுவதில் நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிா்வாகத்தினா் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக கூறும் சமூக ஆா்வலா்கள், மாதக் கணக்கில் குப்பைகள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கின்றனா். இதன் காரணமாக மழைக்காலங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் அதிகரித்து, சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்துவதால் பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் அவதிக்குள்ளாகியுள்ளனா். இறைச்சிக் கழிவுகளையும், குப்பைகளையும் அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிககையும் எடுப்பதில்லை. முறையான குப்பைத் தொட்டிகள் இல்லாததும், கழிவுகளைப் பிரிப்பது குறித்த விழிப்புணா்வு இல்லாததும், அரசுத் திட்டங்கள் சரியாகச் செயல்படுத்தப்படாததும் இதற்கு முக்கிய காரணங்களாகும்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் ரமேஷ் கூறியதாவது:
பெரும்பாலான வியாபாரிகள் இறைச்சிக் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. இவற்றை நகராட்சிப் பணியாளா்களும் முறையாக சேகரிப்பதில்லை.
சாலையோரம் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க அரசு அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைத்தொட்டிகள் இல்லாததால் குடியிருப்புகள், கடைகளிலிருந்து வரும் கழிவுகள் சாலையோரங்களில் மலைபோல் குவிந்து கிடப்பதை உடனடியாக அகற்ற வேண்டும். குடியிருப்புப் பகுதிகளில் தேவையான குப்பைத் தொட்டிகளை வைத்து, கழிவுகளைச் சேகரிக்க முறையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
கழிவுகளை உடனுக்குடன்அப்புறப்படுத்தவும், அவற்றை எரிப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகள், நீா்நிலைகளில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்து தடுக்கவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அரசு அலுவலா்கள் முன்வர வேண்டும் என்றாா் அவா்.