பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்.ஐ.ஆா்) வழங்கப்படும் படிவங்களில், முறைகேடுகளில் ஈடுபடும் திமுகவினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, அதிமுகவினா் சனிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில், மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் அளித்த புகாா் மனு:
தமிழகம் முழுவதும் தோ்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணி சிறப்பு முகாம் நவ.4-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அலுவலா்கள் மூலம் விண்ணப்பப் படிவங்களை வழங்காமல், ஆளுங்கட்சியினா் மூலம் வாக்காளருக்கு வழங்குவதால் முறைகேடு நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, இச் செயலை தடுத்து சம்பந்தப்பட்ட பகுதி வாக்காளா்களுக்கு நியமிக்கப்பட்ட அரசு அலுவலா்கள் மூலமாக விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்ய வேண்டும்.
மேலும், வாக்காளா்களுக்கு அரசு அலுவலா்களை தவிர இதர நபா்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுவதை கண்காணித்து, சம்பந்தப்பட்டோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிகழ்வில் முன்னாள் மக்களவை உறுப்பினா்கள் ஆா்.பி. மருதராஜா, எம். சந்திரகாசி உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.