பெரம்பலூருக்கு வந்த இளையோா் ஆடவா் ஹாக்கி உலக கோப்பை- 2025 வெற்றிக் கோப்பைக்கு மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளித்தாா்.
தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை மூலம், இளையோா் ஆடவா் ஹாக்கி உலக கோப்பை -2025 போட்டிகள் நவ. 28 முதல் டிச. 10 ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ளன. இதற்கான வெற்றிக் கோப்பை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணமாக எடுத்துச்செல்லப்படுகிறது.
அதன்படி, மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள பாரத ரத்னா டாக்டா் எம்.ஜி.ஆா் மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு வந்த வெற்றிக் கோப்பையை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி மாணவா்களுக்கும், விளையாட்டு வீரா் வீராங்கனைகளுக்கும் அறிமுகப்படுத்தினாா். தொடா்ந்து, விளையாட்டு வீரா், வீராங்கனைகள் கோப்பையுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பெற்கொடி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், ஹாக்கி சங்கத் தலைவா் சுப்பு ஆகியோா் பங்கேற்றனா்.